சீனாவின் மெகா பிளானை முறியடித்த இந்தியா...கண்காணிப்பு கப்பல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி!
இந்தியாவின் கடும் அழுத்தத்தை அடுத்து, இலங்கைக்கு கப்பல் அனுப்புவதை காலவரையின்றி ஒத்திவைக்க சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் கடும் அழுத்தத்தை அடுத்து, இலங்கைக்கு கப்பல் அனுப்புவதை காலவரையின்றி ஒத்திவைக்க சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சீன நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு கப்பல் ஒன்று, இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி வரவுள்ளது. இது இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இச்சூழலில், நிலைமை கண்காணித்து வருவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யுவான் வாங் 5 என்ற சீனக் கப்பலானது, தேவையான பொருள்களை நிரப்புவதற்கு இலங்கையிடம் அனுமதி கோரி இருந்தது. ஆகஸ்ட் 11 முதல் 17 வரை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்படவிருந்தது. குறிப்பிட்ட அந்த சீனக் கப்பல் மிகவும் திறன் வாய்ந்த, அதிநவீன உதிரிபாகங்களைக் கொண்ட மேம்பட்ட கடற்படைக் கப்பல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் உள்பட உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிற்கு பெரும் தொகையை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது. இச்சூழலில், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த பயணத்தை முன்னெடுக்க வேண்டாம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் தெரிவித்துள்ளது. "யுவான் வாங் 5 கப்பலை ஹம்பாந்தோட்டைக்கு வந்தடையும் தேதியை இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனை நடத்தப்படும் வரை ஒத்திவைக்குமாறு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று, இந்த சர்ச்சைக்குரிய பயணம் திட்டமிட்டபடி நடக்காது என்று உறுதியளித்திருந்தார்.
2014ஆம் ஆண்டு இரண்டு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தபோதும் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சீனா, நீர்மூழ்கிக் கப்பலை அனுப்பியதைக் கூட, இலங்கைக்கு, குறிப்பாக இந்தியாவுக்கு தெரிவிக்கவில்லை. அதன்பிறகு, இலங்கைத் துறைமுகங்களுக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல் பயணம் எதுவும் நடைபெறவில்லை.
முன்னதாக, சீன கப்பல் இலங்கைக்கு வரவிருப்பது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் படைத்தலைவர் நளின் ஹேரத், "இந்த கப்பல் ராணுவத்தை கண்காணிக்கும் திறன் கொண்டிருப்பதால் இந்தியாவின் கவலையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது. ஆனால் இது ஒரு வழக்கமான பயிற்சியே.
இந்தியா, சீனா, ரஷியா, ஜப்பான் மற்றும் மலேசியா நாடுகளின் கடற்படை கப்பல்களை இலங்கையில் நிறுத்த அவ்வப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோலதான், சீனாவுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்