விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த சிங்கங்கள் - பீதியில் உறைந்த பயணிகள், ஊழியர்கள்!
சிங்கப்பூரில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு சிங்கங்கள் திடீரென சுற்றித் திரிந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்று சிங்கப்பூர். அந்த நாட்டின் முக்கியமான விமான நிலையங்களில் முக்கியமானது சாங்கி விமான நிலையம். இந்த விமான நிலையத்திற்கு பயணிகள் விமானங்களுடன், சரக்குகள் ஏற்றி வரும் விமானங்களும் வருவது வழக்கம். அவ்வாறு வரும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் சிங்கப்பூரில் உள்ள வன உயிரின பூங்காக்களுக்காக கொண்டு வரப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சாங்கி விமான நிலையத்தில் நேற்றும் திடீரென இரண்டு சிங்கங்கள் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட விமான நிலைய அதிகாரிகளும், விமான நிலைய ஊழியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்திற்குள் சிங்கம் எப்படி உள்ளே நுழைந்தது? என்று அதிர்ச்சியடைந்தனர். இருந்தாலும் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிங்கங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மயக்க மருந்து செலுத்தினர். பின்னர், மயக்கமடைந்த சிங்கத்தை உடனடியாக விமான நிலையத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். விமான நிலையத்திற்குள் சிங்கம் உலாவுகிறது என்ற தகவல் பரவியதும் சாங்கி விமான நிலையம் முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த சிங்கங்கள் எப்படி வெளியே வந்தது? எங்கெல்லாம் சென்றன? என்பது பற்றி இதுவரை தெளிவான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கையாளும் கண்டெய்னர்கள் மூலமாக கொண்டு வரப்பட்ட ஏழு சிங்கங்களில் ஒன்றாக கொண்டு வரப்பட்டவை இந்த இரண்டு சிங்கங்கள் என்பது மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிங்கங்கள் சுற்றித்திரிந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையங்கள் இருந்த காரணத்தால், அவற்றால் விமான பயணிகளுக்கோ, விமான நிலைய ஊழியர்களுக்கோ எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. சிங்கங்கள் திடீரென விமான நிலையத்திற்குள் புகுந்த சம்பவத்தால், சாங்கி விமான நிலையத்தின் விமான சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது, இந்த இரண்டு சிங்கங்களும் மாண்டாய் வைல்ட்லைப் குழுவின் பராமரிப்பில் பாதுகாப்பாக உள்ளது. இதுதொடர்பாக, சிங்கப்பூர் விமான நிலையத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : Water in seas | 'கடலுக்கு தண்ணீர் வந்தது இப்படித்தான்' - விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் புதுத் தகவல்!
மேலும் படிக்க : Watch Video | ஆபத்தில் முடிந்த பிரம்மாண்ட கல்யாணம்.. அந்தரத்தில் பறந்த மணமக்கள்... அலறியடித்த கூட்டம்!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்