”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
`இன்னும் எத்தனை வருஷத்துக்குடா பொண்ணுங்கள அடிமைப்படுத்துவீங்க', `இதுல எல்லாம் கடையநல்லூர் மானம் போகலையா', `மொதல்ல உங்க எண்ணத்த மாத்துங்க... நல்லவனா வாழு' என்று இஸ்லாமிய பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்துவந்த அந்த இஸ்லாமிய இளம்பெண்ணுக்கு இஸ்லாமியர்கள் சிலரே எதிராகவும், மிரட்டல்களும் விடுப்பதாக தெரிவித்துள்ள அவர், பலரின் வண்டவாலங்களை தண்டவாளம் ஏத்தியுள்ளார்..
டிரெண்டிங் பாடல்களுக்கு டான்ஸ், வடிவேலு, கவுண்டமணி காமெடி டயலாக்குகளுக்கு நக்கல் நையாண்டி ரியாக்ஷன் என இன்ஸ்டாகிராமில் ஹிஜாபுடன் வைரலாகி வந்தார் வஹிதா பேகம் என்ற இஸ்லாமிய பெண்மணி. இந்நிலையுடன் ஹிஜாபுடன் இப்படி ஆடுவதா? நீ எல்லாம் ஒரு உண்மையான இஸ்லாமிய பெண்ணா? என்று அவர் சமூகத்திலிருந்தே சிலர் இன்ஸ்டாகிராம் கமெண்ட்டுகளில் மிரட்டல் விடுத்து வந்தனர். அதோடு சிலர் அப்பெண்ணின் வீட்டுக்கே சென்று பெற்றோரிடம் `உங்கள் பெண்ணால் ஊர் மானமே போகிறது' என எச்சரித்திருக்கின்றனர்.
இதற்கெல்லாம் அஞ்சாத அப்பெண், தனது ஊரில் நடக்கும் பகீர் குற்றங்களைப் பட்டியலிட்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில், ``நிறைய பேர் எங்க வீட்டுக்குப் போய் என் அம்மாவுக்கு மென்டல் டார்ச்சர் கொடுக்கறீங்கனு நியூஸ் வந்திருக்கு. உங்க மானம் என்னனு நான் சொல்லட்டுமா" எனக் கேஷுவலாக ஆரம்பித்த அப்பெண், ``12th படிக்கிற பொண்ண கல்யாணம் பண்ணி வச்சு அந்த பொண்ண புருஷன் கொலை பண்ணி ஜெயில்ல இருக்கான், அப்றம் கறி வாங்க போன சின்ன பொண்ண ரேப் பண்ணி கொன்னு துண்டு துண்டா வெட்டுனாங்க, அப்றம் சின்ன பசங்க சரக்கு போட்டு போதைல ஒருத்தன் இன்னொருத்தன் குத்தி கொன்னான்... அப்போ எல்லாம் கடையநல்லூர் மானம் போகலையா" என மேலும் பல சம்பவங்களை அடுக்கினார். இப்பெண் குறிப்பிட்ட சம்பவங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் பலர் சமூக வலைத்தளங்களில், அவர் குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறும், அப்பெண்ணுக்கு பாதுகாப்பு தருமாறும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.





















