ரஷ்யாவில் கூகுள் திவாலா? கூகுளுக்கு ரூ.3000 கோடி அபராதம் விதித்த ரஷ்யா! வங்கிகணக்கு முடக்கம்!
உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து யூடியூபில் அபாண்டமான தகவல்களுடன் கூடிய வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருப்பதாகவும், இதனை யூடியூப் நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கூகுள் மற்றும் யூடியூப் தளங்களில் ரஷ்யா உக்ரைன் போர் குறித்த தவறான செய்திகளை நீக்கச்சொல்லி ரஷ்யா வலியுறுத்திய நிலையில் அதனை நீக்கததால் கூகுள் நிறுவனத்தின்மீது 3000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3000 கோடி அபராதம்
ரஷ்யாவின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளரின் கூற்றின் படி, உக்ரைனில் நடந்த போர் குறித்த போலி செய்திகள் மற்றும், ரஷ்ய நாடு சட்டவிரோதமாகக் கருதிய செய்திகளை நீக்கத் தவறியதற்காக ரஷ்ய நீதிமன்றத்தால் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளுக்கு 21.8 பில்லியன் ரூபிள் அதாவது 373 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 3000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டும் அபராதம்
கடந்த ஆண்டு இதே போல கூகுள் நிறுவனத்திற்கு 7 பில்லியன் ரூபிள் (USD 129 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இது கூகுள்மீது ரஷ்யா விதிக்கும் இரண்டாவது அபராதமாகும். அதே ஆல்பாபெட் நிறுவனத்தின் விடியோ தளமான யூடியூப் செயலி மீதும் ரஷ்யா பெரும் கோபம் கொண்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து யூடியூபில் அபாண்டமான தகவல்களுடன் கூடிய வீடியோக்கள் பல வெளி வந்து கொண்டிருப்பதாகவும், இதனை யூடியூப் நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
யூடியூப் மீதும் குற்றச்சாட்டு
ரஷ்ய தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளரின் கூற்றுப்படி, யூடியூப் நிறுவனம் உக்ரைனில் நடைபெற்ற சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கை பற்றிய போலி வீடியோக்களை நீக்கவில்லை என்றும், அந்த வீடியோக்கள் ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளை இழிவுபடுத்துகிறது என்றும் கூறுகிறது. அதே நேரத்தில் தீவிரவாத கருத்துக்களை ஊக்குவிக்கும் போக்கில் உள்ளதாக இதுபோன்ற செய்திகளை அனுமதிப்பது குறித்து யூடியூப் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவில் கூகுள் முடக்கம்
கூகுளின் ரஷ்ய வங்கி கணக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக கூகுள் ரஷ்யாவில் திவால் நிலைக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய கூகுளின் வங்கிக்கணக்கை ரஷ்ய அதிகாரிகள் கைப்பற்றியதால், ரஷ்யாவை சேர்ந்த ஊழியர்களை பணியமர்த்துவது மற்றும் ஊதியம் வழங்குவது, சப்ளையர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்துவது மற்றும் பிற நிதிக்கடமைகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட விஷயங்களை ரஷ்யா அலுவலகம் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து கூகுள் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில பத்திரிக்கை நிறுவனங்கள் கூகுளுக்கு விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி, அதற்கும் பதில் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்