உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகள் வாபஸ் செய்தது உண்மையே! உறுதி செய்தது ரஷ்யா
உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகளை வாபஸ் பெற்றது உண்மைதான் என ரஷ்யா உறுதி செய்துள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகளை வாபஸ் பெற்றது உண்மைதான் என ரஷ்யா உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உக்ரைன் ரஷ்யா சர்ச்சர் உச்சமடைந்துள்ளதால் உலக நாடுகள் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் உக்ரைன் இணையவே கூடாது என ரஷ்யா பிடிவாதம் காட்டுகிறது. உக்ரைனோ பழைய சோவியத் ரஷ்யாவில் இருந்திருந்தாலும் இப்போது தன்னை ஐரோப்பிய நாடாக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. அப்போதுதான் பொருளாதார ரீதியாக தன்னால் மேம்பட முடியும் என நினைக்கிறது. இதனால் நேட்டோ படையில் தன்னை இணைத்துக் கொள்ள கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்வம் காட்டிய உக்ரைன், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதில் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில் தான் உக்ரைன் எல்லையில் கடந்த நவம்பர் இறுதியிலிருந்தே படைகளைக் குவிக்கத் தொடங்கியது ரஷ்யா. இன்றைய நிலவரப்படி எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்து 30,000 வீரர்களை நிறுத்தியுள்ளது. ரஷ்யா போர் வீரர்கள், ஃபைட்டர் ஜெட்கள், ராணுவ டாங்கிகள் என அணிவகுத்து நிறுத்திவைத்திருந்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உலகையே அச்சம் கொள்ள வைத்துள்ளன.
அதற்குள் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, லிதுவேனியா, நேட்டோ படைகள் ஆதரவு, ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு என்று பழைய உலகப் போர்களை நினைவுபடுத்தும் வகையில் அணிகளின் ஆதரவுக் கணக்குகள் எல்லாம் வெளியாகின.
இந்தச் சூழலில் அமெரிக்காவும், ரஷ்யா எந்தவித முன்னறிவிப்புமின்றி உக்ரைன் மீதான படையெடுப்புக்குத் தயாராகிவிட்டது என்றது. உக்ரைன் நாட்டின் அதிபரோ, பிப்ரவரி 16 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என்றார். உலக நாடுகள் பலவும் உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்கள் உடனடியாக நாடு திரும்பலாம் என்றனர். இப்படியாக உலகம் பரபரக்கிறது. இன்னொரு புறம் கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலை என எல்லாம் உக்ரைனால் உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் எல்லாம் சரிகின்றன. இந்த போர் உக்கிரமாக இருக்க, சற்றே ஆறுதல் செய்தியாக இன்று வெளியாகியிருப்பது தான் ரஷ்யாவின் ஆமோதிப்பு. ஆம், நாங்கள் எல்லையில் இருந்து சில படைகளை வாபஸ் பெற்றுள்ளோம் என்று ஆமோதித்துள்ளது ரஷ்யா.
இது தொடர்பாக க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "நாங்கள் படைகளை குவிக்கவே இல்லை. இது வழக்கமான ஒத்திகை என்று ஆரம்பமே முதலே சொல்லி வருகிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகள் எங்களை போர் விரும்பிகள் போல் சித்தரித்தன. இப்போது படைகள் வாபஸும் பரபரப்பு செய்தியாக்கப்படுகின்றன. இதுவும் வழக்கமான நிகழ்வு என்றே நாங்கள் கூறுகிறோம். ராணுவ ஒத்திகைகள் நடத்தப்பட்டன. அதற்குள் மேற்கத்திய நாடுகளுக்கு ஹிஸ்டீரியா ஆகிவிட்டது" என்றார்.