கோல்டன் ஆர்ச்சுக்கு குட் பை...! ரஷ்யாவில் இருந்து வெளியேறிய மெக்டோனால்ஸ் நிறுவனம்...!
’’ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் தனது மொத்த வருவாயில் 9% வருவாயை அதாவது 2 பில்லியன் டாலர் அளவுக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஈட்டி உள்ளது’’
துரித உணவு பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள மெக்டோனால்ட் நிறுவனம் புதிய ப்ராண்டிங்க் உரிமையாளர் மூலம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை பூர்விகமாக கொண்ட மெக்டொனால்ஸ் நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள புஷ்கின் சதுக்கத்தில் முதன்முதலாக தனது உணவகத்தை நிறுவியது. 1900களில் சோவியத் யூனியன் சிதைந்த காலகட்டத்தை பனிப்போரின் பதட்டங்களை கரைக்கும் விதமாக லட்சக்கணக்கான ரஷ்யர்களுக்கு அமெரிக்க உணவுக்கலாச்சாரத்தை கொண்டு சென்று சேர்க்கும் வாகனமாக மெக்டொனால்டின் வருகை அமைந்தது.
வெளியேறிய கோகோ கோலா, ஸ்டார் பக்ஸ்
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து மெக்டோனால்ஸின் வெளியேற்றம், கடந்த கால நினைவுகளை அசைபோட காரணமாய் அமைந்துள்ளது. ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து கோகோ கோலா மற்றும் ஸ்டார் பக்ஸ் ஆகிய நிறுவனங்கள் முழுமையாக வெளியேறிய நிலையில், ரஷ்யாவில் உள்ள மெக்டொனால்ஸ் உணவகங்களை உள்ளூர் உரிமதாரர்களில் ஒருவரான அலெக்சாண்டர் க்ரோவருக்கு வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பிராண்டிங் எங்களுக்கு கடை உங்களுக்கு
இந்த ஒப்பந்தத்தில் மெக்டொனால்டின் பெயர் மற்றும் வணிக முத்திரை உள்ளிட்ட பிராண்டிங்க் உரிமைகளை மெக்டோனால்ஸ் நிறுவனம் விற்கவில்லை, வெறும் கடைகள் மற்றும் அதன் செயல்பாடு சார்ந்தவைகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் இதனை மெக்டோனால்ஸ் நிறுவனம் நினைத்தால் வாங்கும் வகையிலேயே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக கூறப்பட்டுகிறது.
மெக்டோனால்ஸ் பெயர் மாற்றம்
இந்த நிலையில் மெக்டோனால்ஸ் நிறுவனத்தின் வணிக சின்னங்களான ”கோல்டன் ஆர்ச்சஸ்” வடிவம் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்ஸ் பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெக்டோனாட்டுக்கு பதிலாக ரஷ்யாவில் திறக்கப்படவிருக்கும் புதிய உணவகத்தின் பெயர் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. மெக்டோனாட்ஸ் உணவக செயலியின் பெயர் மை பர்கர் என மாற்றப்பட்ட நிலையில், இது தற்காலிகமான பெயர் மாற்றம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செயலியின் முகப்பில் "சில விஷயங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன, ஆனால் நிலையான வேலை இங்கே இருக்க வேண்டும்." என்ற புதிய பொன்மொழியும் இடம்பெற்றுள்ளது.
2 பில்லியன் டாலர் வருவாய்
ரஷ்யா முழுவதும் மெக்னோனாட்ஸ் நிறுவனத்தின் கடைகள் மூடப்பட்டாலும் சில பிராஞ்சைஸ்தாரர்களின் கடைகள் சில இடங்களில் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளில் கூடும் கூட்டத்தால் இந்த உணவகங்கள் அதிக லாபத்தை ஈட்டி வருகின்றன. மெக்டோனால்டின் கடைகளின் வாயிலில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வைரல் ஆனது. உலகின் மிகப்பெரிய பர்கர் சங்கிலியான McDonald's, ரஷ்யா முழுவதும் உள்ள அதன் கிட்டத்தட்ட 850 உணவகங்களில் 84% உரிமையைக் கொண்டிருந்தது. மற்றும் தனது கடைகளை விற்பனை செய்ததன் மூலம் 1.4 பில்லியன் டாலர் வரை அந்நிறுவனம் வசூலித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளில் இருந்து கடந்த ஆண்டில் மட்டும் தனது மொத்த வருவாயில் 9% வருவாயை அதாவது 2 பில்லியன் டாலர் அளவுக்கு மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் ஈட்டி உள்ளது.