"போரை ஆதரிக்கவில்லை" ரஷிய அதிபர் புதின் முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் இதில் இரட்டை வேடம் போடக் கூடாது என்றும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் உள்ள கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "போர்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் போன்ற பல்வேறு முக்கிய சவால்களை உலகம் எதிர்கொண்டுள்ள நேரத்தில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், "வடக்கு- தெற்கு பிரிவினை, கிழக்கு - மேற்கு பிரிவினையைப் பற்றி உலகம் பேசுகிறது. பணவீக்கத்தைத் தடுத்தல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், எரிசக்தி பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு போன்றவை உலகில் உள்ள அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்களாகும்.
"மனித குலத்தின் நலனுக்காக செயல்படும் பிரிக்ஸ்"
தொழில்நுட்பத்தின் இந்த சகாப்தத்தில், சைபர் டீப்ஃபேக், தவறான தகவல் பரவுதல் போன்ற புதிய சவால்கள் உருவாகியுள்ளன. இத்தகைய நேரத்தில், பிரிக்ஸ் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. பன்முகத்தன்மை கொண்ட மற்றும் உள்ளடக்கிய மேடையாக, பிரிக்ஸ் அனைத்து துறைகளிலும் நேர்மறையான பங்கை ஆற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்த விஷயத்தில், நமது அணுகுமுறை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். பிரிக்ஸ் அமைப்பு பிளவுபடுத்தும் அமைப்பு அல்ல. மனித குலத்தின் நலனுக்காக செயல்படும் அமைப்பு என்ற செய்தியை நாம் உலகிற்கு அளிக்க வேண்டும்.
நாங்கள் பேச்சுவார்த்தையையும் ராஜதந்திரத்தையும் ஆதரிக்கிறோம், போரை அல்ல. கோவிட் போன்ற ஒரு சவாலை நாம் ஒன்றிணைந்து சமாளிக்க முடிந்ததைப் போலவே, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான, வலுவான, வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான புதிய வாய்ப்புகளை நிச்சயமாக உருவாக்க முடியும்.
பிரதமர் மோடி பேசியது என்ன?
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராட, நமக்கு அனைவரின் ஒருமித்த மற்றும் உறுதியான ஆதரவு தேவை. இந்த முக்கியமான விஷயத்தில் இரட்டை வேடம் போட இடமில்லை. நமது நாடுகளில் இளைஞர்கள் தீவிரமயப்படுவதைத் தடுக்க நாம் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐநா-வில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சர்வதேச பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்த விரிவான செயல்திட்டத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், இணையதள பாதுகாப்பு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்கான உலகளாவிய விதிமுறைகளை வகுக்க நாம் பணியாற்ற வேண்டும்.
பல்வேறு கண்ணோட்டங்கள், சித்தாந்தங்கள் ஆகிவற்றின் சங்கமத்தால் உருவாக்கப்பட்ட பிரிக்ஸ் குழுவானது, உலகிற்கு உத்வேகம் அளிப்பதாகவும், நேர்மறையான ஒத்துழைப்பை வளர்ப்பதாகவும் உள்ளது. நமது பன்முகத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னோக்கிச் செல்லும் நமது பாரம்பரியம் ஆகியவை நமது ஒத்துழைப்புக்கு அடிப்படையாகும்.
நமது இந்தத் தரமும், பிரிக்ஸ் நாடுகளின் உணர்வும் மற்ற நாடுகளையும் இந்த அமைப்பிற்கு ஈர்த்து வருகிறது. வரவிருக்கும் காலங்களில், இந்த தனித்துவமான தளத்தை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான முன்மாதிரியாக மாற்றுவோம் என்று நான் நம்புகிறேன்.
இந்த விஷயத்தில், பிரிக்ஸ் அமைப்பின் நிறுவன உறுப்பினர் என்ற முறையில், இந்தியா எப்போதும் தனது பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்றும்" என்றார்.