விமானத்தில் சிகரெட்..பரபரவென பற்றிய நெருப்பு.. பதைபதைத்து போன ஊழியர்கள்.. நடந்தது என்ன?
விமானத்தில் சிகரெட் புகைத்த நபரால் கழிவறையில் தீ பிடிக்க ஒருசில நிமிடங்கள் விமானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
விமானத்தில் சிகரெட் புகைத்த நபரால் கழிவறையில் தீ பிடிக்க ஒருசில நிமிடங்கள் விமானத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கழிவறை சென்று சிகரெட் புகைக்க முயற்சித்துள்ளார். அப்போது ஸ்மோக் அலாரம் அடிக்க பயணிகள் சிலர் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை கதவைதட்டி வெளியே அழைத்து சிகரெட்டை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டனர். ஆனால் குப்பைத் தொட்டியில் இருந்த சில குப்பைகளில் தீ பற்றியதால் பயணிகள் பதற்றமடைந்தனர். விமான சிப்பந்திகள் உடனே செயல்பட்டு ஃபயர் எக்ஸ்ட்விங்குயிஷர் கொண்டு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இல்லை. விமானம் திட்டமிட்டபடி பாங்காங் நோக்கி பயணித்தது. இதற்குக் காரணமான பயணிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. விமானம் பத்திரமாக பாங்காக்கில் தரையிறக்கப்பட்டது. அந்தப் பயணி தாய்லாந்தில் இருந்து மீண்டும் இஸ்ரேலுக்கு திரும்பியவுடன் அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட் தடை எப்போது வந்தது?
1980கள் வரை விமானத்தில் சிகரெட் புகைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது எல்லா சர்வதேச விமானங்களும் புகைப்பிடிக்க தடை விதித்துள்ளது. 1973ல் ரியோ டி ஜெனீரியோவில் இருந்து பாரிஸ் நோக்கி சென்ற வாரிஜ் ஃப்ளைட் 820 விபத்துக்குள்ளானது. இதில் 123 பயணிகள் உயிரிழந்தனர். இதற்குக் காரணம் விமானத்தின் கழிவறையில் சிகரெட் புகைத்த நபர் அதன் மிச்சத்தை குப்பைத் தொட்டியில் போட அங்கிருந்து பற்றிய நெருப்பால் விமானம் எரிந்து விழுந்தது.
அண்மையில் இந்தியாவில் வைரலான பாடிபில்டர் சம்பவம்:
இதேபோல் நம் நாட்டில் அண்மையில் பறக்கும் விமானத்தில் பாடி பில்டர் ஒருவர் சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. துபாயிலிருந்து டெல்லிக்கு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சென்ற பிரபல பாடி பில்டர் பாபி கட்டாரியா, விமான இருக்கையில் அமர்ந்தபடி சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்தார். இந்த புகைப்படம் வைரலானது. இதுகுறித்து கேள்விகள் எழுந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளித்தது. விமானத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நடந்த இச்சம்பவத்தின் காரணமாக பிப்ரவரியில் 15 நாட்களு க்கு பயணிக்க தடை விதி க்கப்பட்டது எனக் கூறியிருந்தது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் விதிமுறைகளின்படி, பயணிகள் விதிகளை மீறினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்ய அதிகாரம் உள்ளது. இது தொடர்பான வீடியோ குறித்து மத்திய அரசு, இந்தச் சம்பவம் அபாயகரமானது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது.