Pakistan Sindh Train Accident: பாகிஸ்தானில் ரயில்கள் மோதல்; 30யை தாண்டிய உயிர் பலி!
பாகிஸ்தானில் மில்லட் ரயில் மற்றும் சர்சையத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சுமார் 30 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பரவல் ஓரளவு காணப்பட்டாலும் அந்த நாட்டில் ரயில் போக்குவரத்து தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டில் நேற்று சர் சையத் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலும், மில்லட் பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
சர் சையத் எக்ஸ்பிரஸ் நேற்று லாகூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சமயத்தில் ராவல் பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி மில்லட் பயணிகள் ரயிலும் சென்று கொண்டிருந்தன. சரியாக சரோகதா செல்லும் வழியில் அந்த நாட்டில் உள்ள கோட்கி மாவட்டத்தின் தர்கி என்ற இடத்தில் இரண்டு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இரு ரயில்களும் வேகமாக வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால், மில்லட் ரயில் தடம்புரண்டது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சத்தம் கேட்டு, உடனடியாக அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், இதுதொடர்பாக அந்த நாட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் பெட்டிகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிவிந்ததும், உடனடியாக கோட்கி மாவட்ட துணை ஆணையர் உஸ்மான் அப்துல்லா சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் மீட்பு பணிகளையும், விபத்து குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது இந்த விபத்தில் குறைந்தது இதுவரை 30 பேர் உயிரிழந்திருப்பார்கள் என்றும், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தகவல் தெரிவித்தார். தடம்புரண்டுள்ள 14 பெட்டிகளில் ஆறு முதல் எட்டு பெட்டிகள் வரை முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இன்னும் சில பயணிகள் ரயில் பெட்டிகளுக்கு உள்ளே சிக்கிக் கொண்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் மிகவும் சவாலாக உளது என்றும் அவர் கூறினார்.
சேதம் அடைந்த மற்றும் தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருப்பவர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக உள்ளதால், கனரக இயந்திரங்களின் உதவிகள் மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், காயம் அடைந்தவர்களுக்காக விபத்து நடந்த இடத்திலே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்வதற்கு உயரதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மில்லட் ரயில் மற்றும் சர்சையத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவமும், இன்னும் பலர் ரயில் பெட்டிகளில் சிக்கிக்கொண்ட சம்பவமும் அந்த நாட்டு மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : ''ரசாயனக் கசிவு குறித்து தெரிந்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை?'' - இலங்கை கப்பல் விவகாரத்தில் கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்