Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அவரவர் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் வேளையில், எல்லைக்கோட்டு பகுதியில் இரு நாடுகளும் தங்கள் பீரங்கிப் படைகளை குவித்து வருவதால், முழு அளவிலான ராணுவ மோதலுக்கு இது வழிவகுக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.
மோதில் போக்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான், நம் நாட்டுடன் மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. கடந்த, 2021-ல் ஆப்கானிஸ்தான் நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. அப்போதிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும், டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு, அடிக்கடி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வந்தது.
தலிபான் ஆட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து வந்ததால், இது பெரிய அளவில் பிரச்னையாக எழவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, இரு நாட்டு எல்லையிலும் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. இதையடுத்து, டி.டி.பி., தலைவர்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியது. இதற்காக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள்ளும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான மோதலாக மாறியது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். இதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை. கடந்த சில நாட்களாக இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் குவிப்பு - பதற்றம்
இப்படிப்பட்ட சூழ்நிலையில், இரு நாடுகளும் தங்கள் எல்லையில் படைகளையும், தளவாடங்களையும் குவித்து வருகின்றன. குறிப்பாக பீரங்கிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், போர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இரு தரப்பிற்கும் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. துரண்ட் லைன்(Durand Line) என்ற பகுதியில் தான் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரு நாடுகளுமே தங்களது எல்லைப் பகுதிகளில் பீரங்கிகளை குவித்துள்ளன. மேலும், இரு நாடுகளும், ராணுவ வீரர்கள், தளவாடங்களையும் அதிகளவில் குவிப்பதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதனிடையே, சர்வதேச நாடுகளும் இந்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போர் வெடித்தால், அது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், உலக நாடுகளின் கவனம் தற்போது இந்த பக்கம் திரும்பியுள்ளது.






















