கருச்சிதைவு துயர் விடுப்பை சட்டப்பூர்வமாக்கி தீர்மானம் நிறைவேற்றியது நியூசிலாந்து..
இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி குழந்தை இறந்தே பிறக்கும் சூழலிலும், பேறுகாலம் முழுமை பெறாமல் முடியும் தருவாயிலும் பெண்களும் அவர்களின் துணைவர்களும் இனி நோய் விடுப்பு எடுக்கவேண்டிய அவசியமில்லை. மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை எடுத்துக்கொள்ளலாம்.
கருச்சிதைவை எதிர்கொள்ள நேரிடும் பெண்கள் மற்றும் அவர்களது இணையர்களுக்கான சம்பளத்துடன் கூடிய துயர் விடுப்பைச் சட்டபூர்வமாக்கித் தீர்மானம் இயற்றியிருக்கிறது நியூசிலாந்து நாடாளுமன்றம். இதையடுத்து இந்த விடுப்பை அதிகாரப்பூர்வமாக்கிய நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்து தற்போது நியூசிலாந்தும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தச் சட்டத்தின்படி குழந்தை இறந்தே பிறக்கும் சூழலிலும், பேறுகாலம் முழுமை பெறாமல் முடியும் தருவாயிலும் பெண்களும் அவர்களின் இணையர்களும் இனி நோய் விடுப்பு எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு மாறாக மூன்று நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை எடுத்துக்கொள்ளலாம்.
இந்தச் சட்டத்தின் மீதான தீர்மானத்தைத் தொடங்கி வைத்துப்பேசிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜின்னி ஆண்டர்சன், “இந்த விடுப்பு இணையர்கள் தங்களுடைய துக்கத்தை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசமாக இருக்கும். இதற்காக அவர்கள் நோய் விடுப்பு எடுக்கவேண்டிய அவசியமில்லை. நோய் விடுப்பு எடுப்பதற்கு அது நோயுமல்ல, இழப்பு” என்று தெரிவித்தார்.
குழந்தையைத் தத்தெடுக்கும் முயற்சியில் இருப்பவர்கள், செயற்கைக் கருத்தரிப்பு மூலம் குழந்தைப்பேறு நடைமுறைக்கு முயற்சிப்பவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு இந்த விடுப்புச்சட்டம் பொருந்தும்.