Sri Lanka Presidential Election: இலங்கையின் புதிய அதிபர் யார்? எப்படி நடக்கும் அதிபர் தேர்வு? முழு விவரம்!
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்களை அந்நாட்டு நாடளுமன்றம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்யும் முறை குறித்த விவரங்களை அந்நாட்டு நாடளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடைபெறும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் அந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இலங்கையில் நாடாளுமன்றத்தினால் அதிபரை தெரிவு செய்த அனுபவம் இதற்கு முன்னர் இருந்த போதிலும், இது சிறப்பு வாய்ந்தது. 1993 இல், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மறைவைக் கருத்தில் கொண்டு, டி.பி. விஜேதுங்க அதிபரின் மீதமுள்ள பதவி காலத்திற்கு வாக்கெடுப்பே இல்லாமல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாக்குப்பதிவு எப்படி நடைபெறும்?
வாக்குப்பதிவு தொடங்கும் முன், தேர்தல் நடத்தும் அலுவலர் காலி வாக்குப் பெட்டி அல்லது காலி வாக்குப் பெட்டிகளை எம்.பி.க்களிடம் காட்டி சீல் வைக்க வேண்டும். இந்த தேர்தலில் சபாநாயகருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பது சிறப்பு.
இதனால், வாக்குப்பதிவு தொடங்கும் போது, தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படும் நாடாளுமன்ற செயலாளர், சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு எம்.பி.யின் பெயரையும் அழைப்பார். பின்னர் உறுப்பினர் தேர்தல் அதிகாரியின் மேசைக்குச் சென்று வாக்குச் சீட்டைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் பின்பக்கம் நாடாளுமன்ற உறுப்பினர் தனது இனிஷியலுடன் ஒரு கையொப்பம் இட வேண்டும்.
அதன் பிறகு, வாக்குச் சீட்டைப் பெற்ற உறுப்பினர் அறையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடிக்குச் சென்று, வாக்குச் சீட்டில் தனது வாக்கை பதிவு செய்ய வேண்டும்.
வாக்குகள் எப்படி எண்ணப்படும்? வெற்றியாளர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?
வாக்களிப்புக்கு பிறகு, ஒவ்வொரு வேட்பாளரின் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். குறிப்பிட்ட வேட்பாளர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு வர விரும்பினால், அவருக்கு அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்த மற்றொரு எம்.பி.யை அவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
ஒரு வேட்பாளர் பதிவான செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றால், தேர்தல் நடத்தும் அதிகாரி, அதாவது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக உடனடியாக அறிவிப்பார்.
எந்த வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கும் மேல் பெறவில்லை என்றால், தேர்வு முறை சிறிது நீட்டிக்கப்படும். அதாவது குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். குறிப்பிட்ட எம்பி வாக்களித்த வேட்பாளர், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டால் அவருக்கு இரண்டாவது விருப்ப வேட்பாளர் இருக்கும் பட்சத்தில், அந்த வாக்கு இரண்டாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும்.
இதற்கு பிறகும், எந்தவொரு வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதிக்கும் மேலான வாக்குகளை பெறவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் குறைந்த வாக்குகள் பெற்ற வேட்பாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, இரண்டாவது, மூன்றாவது விருப்ப வேட்பாளர்களுக்கு அந்த வாக்குகள் சேர்க்கப்படும்.
அவ்வாறு செய்த பின்னரும், எந்த ஒரு வேட்பாளரும் செல்லுபடியாகும் வாக்குகளில் பாதியைப் பெறவில்லை என்றால், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மேற்கண்டவாறு அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்