Lay Off: ஆயிரக்கணக்கானோரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்... அமேசான், மைக்ரோசாப்ட் முடிவால் பணியாளர்கள் அதிர்ச்சி..!
லே ஆஃப் தாக்கத்தால் புத்தாண்டின் தொடக்கத்திலே ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப பெரு நிறுவனங்கள் முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் பெரு நிறுவனங்களில் பணியாளர்கள் நீக்கம், வேலையிழப்பு ஆகிய சிரமங்கள் 2023ல் இருக்கும் என்று கடந்தாண்டே நிபுணர்கள் எச்சரித்தனர். அதற்கு ஏற்றாற்போல லே ஆஃப் எனப்படும் வேலையிழப்பு தாக்கம் கடந்தாண்டு முதலே தொடங்கிவிட்டது.
வேலையிழப்பு:
இந்த நிலையில், புத்தாண்டாகிய 2023ல் அதன் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, இணையதள வர்த்தகத்தில் ஜாம்பவன்களாகிய மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய நிறுவனங்களிலும், சமூக வலைதளங்ளான ஃபேஸ்புக், ட்விட்டரிலும் பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருவது சகஜமாக மாறி வருகிறது.
இந்த சூழலில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விரைவில் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணிநீக்க அறிவிப்பு இன்று கூட வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தற்போது 22 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
11 ஆயிரம் பேர்:
அவர்களில் 11 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு எடுத்திருப்பது பணியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 1000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான சத்யா நாதெல்லா சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அவர் உலகளாவிய பொருளாதார மாற்றங்களில் இருந்து மைக்ரோசாப்ட் இன்னும் விடுபடவில்லை என்று கூறியிருந்தார். மேலும், அவர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அடுத்த 2 ஆண்டுகள் மிகவும் சவால் நிறைந்த ஆண்டாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் அடுத்த அலை அபாயம், உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் என்று பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வேலையிழப்பு அபாயத்தால் மக்கள் மேலும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
பெருநிறுவனங்கள்:
கடந்த 5 மாதங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் தங்களது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. சமூக வலைதளங்களில் ஜாம்பவான் நிறுவனங்களான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் ஏற்கனவே தன்னுடை பணியாளர்கள் ஆயிரக்கணக்கான பேரை வேலையை விட்டு நீக்கியுள்ள சூழலில், இந்த மாதம் மேலும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையை விட்டு நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தங்களது அலுவலகங்களை ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் காலி செய்ய திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.