‛யாரும்மா நீங்கெல்லாம்...?’ லேப்டாப்பிற்கு பூஜை... தைவானையும் தன் வசமாக்கி ‛உலக நாயகன்’ நித்யானந்தா!
Nithyananda : உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை தரும் தைவான் நாட்டில், லேப்டாப்பிற்கு பூஜை செய்து அதை பதிவிட்ட பெண் பக்தரின் செயல், நித்தியானந்தா ‛உலக நாயகனாக மாறிவிட்டாரோ...’ என எண்ணத் தோன்றுகிறது.
தனி வீடு, தனி ஆசிரிமம், தனி மாநிலம் என சுற்றிக் கொண்டிருந்த நித்யானந்தா, தற்போது கைலாசா என்கிற தனி நாட்டிற்கு அதிபரான அதிர்ச்சியிலிருந்து இன்னும் நாட்டு மக்கள் மீளவில்லை. ஆனாலும், அடுத்தடுத்த அதிர்ச்சிகளை நித்யானந்தா கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார். சமீபமாக நித்யானந்தாவிற்கு உடல் நிலை சரியில்லை, அதன் காரணமாக, அவர் படுத்த படுக்கையில் ஓய்வு எடுத்து வருகிறார்.
தன்னுடைய நிலை குறித்து 27 டாக்டர்கள் கண்காணித்து வருவதாகவும், தான் குணமடைந்து வருவதாகவும், அடுத்தடுத்து பரிசோதனை முயற்சிகள் நடந்து வந்தாலும், உணவு மற்றும் உறக்கமின்றி தவித்து வருவதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவிற்கு பிறகு தான், நித்தியானந்தாவின் உண்மையான உடல்நிலை குறித்த கவலை, அவரது பக்தர்களுக்கு ஏற்பட்டது. உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், நித்யானந்தாவின் போட்டோ அக்கம் பக்கம் எல்லாம் பரவியது. இன்னும் சிலர், அவரது பதிவில் இருந்த சில விசயங்களை கோடிட்டு காட்டி, நித்யானந்தா, ஜீவசமாதி அடைய போகிறார் என நம்பத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, அவசரமாக நித்யானந்தா, இன்னொரு பதிவை வெளியிட்டார். அதில் தனது உடலில் எந்த நோயும் இல்லை என்றும், தனக்கு தூக்கமும், உணவும் மட்டுமே பிரச்சனையாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால், அதில் அவர் எந்த போட்டோவும் வெளியிடவில்லை. மாறாக, அன்றைய நாளின் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டு ஒரு கையெழுத்தை வெளியிட்டார். அத்தோடு , தான் குணமாக வலியுறுத்தி, பூஜை நடத்தி அதை செல்ஃபி எடுத்து வெளியிடுமாறு கட்டளையிட்டார். அதற்காக பிரத்யேக போட்டோ ஒன்றையும் அவர் பதிவில் வெளியிட்டார்.
நித்தியானந்தா அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம், அவரை பின்தொடர்வோர், பூஜைகளை நடத்தி செல்ஃபி வெளியிட ஆரம்பித்தனர். இதில் உலகளாவிய பக்தர்களை கொண்டவர் நித்தியானந்தா என்பது நிரூபணமானது. ஆம்... வெளிநாடு வாழ் மக்கள் பலர், அந்த செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டனர். அதில் தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும் அடக்கம்.
குறிப்பாக தைவானைச் சேர்ந்த மா அனந்தினி (தீவிர பக்தியால் பெயரை மாற்றிக் கொண்டாம் போல) என்கிற பெண், தனது லேப்டாப்பில் நித்தியானந்தா குறிப்பிட்ட படத்தை வைத்து , விளக்கேற்றி வழிபட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். உயர் தொழில்நுட்ப தயாரிப்புகளை தரும் தைவான் நாட்டில், லேப்டாப்பிற்கு பூஜை செய்து அதை பதிவிட்ட பெண் பக்தரின் செயல், நித்தியானந்தா ‛உலக நாயகனாக மாறிவிட்டாரோ...’ என்கிற கேள்வியை எழுப்புகிறது.
இவர் மட்டுமல்ல, இவரைப் போல இன்னும் பல நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள், பக்தைகள், நித்யானந்தா பூரண குணமடைய வேண்டிய பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றனர்.