Coronavirus Origins: கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? 90 நாட்களுக்குள் கண்டுபிடிக்க ஜோ பைடன் கெடு!
கொரோனா வைரஸ் முதலில் எங்கிருந்து தோன்றியது என்பது தொடர்பாக 90 நாட்களுக்குள் தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவு
கொரோனா வைரஸ் எங்கிருந்து முதலில் பரவியது என்பதற்கான அறிக்கையை 3 மாதங்களுக்குள் தனக்கு சமர்பிக்க வேண்டும் என்று அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் சீனாவில் விலங்குகள் மூலம் தோன்றியதா அல்லது ஆய்வக விபத்தில் இருந்து வெளிவந்ததா என்பது குறித்து அடுத்த மூன்று மாதங்களில் தனக்கு புகார் அளிக்குமாறு அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உத்தரவிட்டார்.
சீனாவின் வுஹானில் உள்ள ஒரு சந்தையில் விலங்குகள் மூலம் அல்லது அதே நகரத்தில் மிகவும் பாதுகாப்பான ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸை வெளியிட்டதாக கூறப்படும் நிலையிலும், வைரஸ் எவ்வாறு முதலில் தோன்றியது என்பது குறித்த சர்ச்சை தொடர்வதால் பைடன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கான தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும், 90 நாட்களில் தன்னிடம் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அமெரிக்காவின் மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சீனாவுக்கு ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் புதிதாக 21,703 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேநாளில் 574 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.39 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,06,146 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.
உலகில் அதிக அளவில் பாதிப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையில் இருப்பதால் கொரோனா தொடர்பான விசாரணையை அந்நாட்டு அதிபர் முடுக்கிவிட்டுள்ளார்.