Jack Dorsey: சும்மாவா போவோம்? அடுத்த இலக்கு பிட்காயின்!? மாஸ்டர் ப்ளானில் ஜேக்..!
எந்த நிறுவனத்தில் சி இ ஓக்கள் மாறினாலும் அது மற்றொருமொரு நல்ல கையில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அதனால் ஜேக்கின் விலகல் ட்விட்டரை எந்த விதத்திலும் பாதிக்காது.
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென இன்று அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் பதவியேற்க உள்ளார். புதிய நபரை உலகம் உற்று நோக்கினால் திடீரென விலகி நகரும் ஜேக் மீதும் பலரும் பார்வையை பதித்துள்ளனர். சிறப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தடாலடியாக ட்விட்டரில் இருந்து இவர் ஏன் வெளியேறுகிறார்? அடுத்தக்கட்ட ப்ளான் என்னவாக இருக்குமென? பலரும் யோசனையில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் ஜேக் வேண்டாமென்ற பதவி ஏதோ ஒரு சாதாரண பதவி அல்ல. இதனை தாண்டி செல்கிறார் என்றால் ஒரு மாஸ்டர் ப்ளானை கையில் வைத்திருக்கிறார் ஜேக் என நம்புகின்றனர் அவரை உன்னிப்பாக கவனித்தவர்கள். அவர்களின் யூகம் சரியென்றால் ஜேக் பயணப்படும் அந்த இலக்குதான் 'பிட்காயின்'. யூகத்திற்கு காரணமும் ஜேக் தான். கடந்த வருடம் மீட்டிங் ஒன்றில் பேசிய அவர் '' நான் ஸ்கொயர் அல்லது ட்விட்டரில் இல்லையென்றால் நான் பிட்காயினுக்காக வேலை பார்ப்பேன்’ என்றார். அந்த தீப்பொறி தான் இப்போது பற்றுகிறது.
ஜேக் ட்விட்டரில் இருந்து விலகியது நேற்று முதல் முறை அல்ல. இரண்டாவது முறை. ஏற்கெனவே ஏற்கெனவே ஒரு முறை ட்விட்டரில் இருந்து வெளியேறிய ஜேக் 2009ம் ஆண்டு ஸ்கொயர் என்ற கம்பெனியை தொடங்கினார். டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் தலைமை நிர்வாக அதிகாரியும் இவரே தான். அதன்பின்னர் மீண்டும் 2015ம் ஆண்டு ட்விட்டருக்கு திரும்பினார் ஜேக். ஆனால் அவரிடம் கையில் மற்றொருமொரு நிறுவனமான ஸ்கொயருமே இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்கள் என பரபரப்பாய் இருந்தார் ஜேக். ஆனால் ஜேக்கின் ஒரே நேரத்தில் இரு நிறுவனம் கான்செப்ட் பல முதலீட்டாளர்களுக்கு பிடிக்கவில்லை.
குறிப்பாக எலியட் மேனேஜ்மென்ட். ட்விட்டரின் பெரிய முதலீட்டு நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட், ஜேக்கை கடந்த வருடமே எச்சரித்தது. எலியட் மேனேஜ்மென்ட் நிறுவனரும் பில்லியனர் முதலீட்டாளருமான பால் சிங்கர், ட்விட்டரை மட்டுமே ஜேக் நிர்வகிக்க வேண்டுமென விரும்பினார்.ஆனால் ஜேக் அசைந்துகொடுக்கவில்லை. அப்போதே ஜேக்குக்கான தேதி குறிக்கப்பட்டது. அதனை ஜேக்கும் தெரிந்தே வைத்திருந்தார். இப்படி இருக்கையில் ட்விட்டரின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. லாபத்தை தொடர்ந்து பார்த்தாலும் எதிர்கால திட்டத்தை கடுமையாக விதைத்தது ட்விட்டர். அதாவது முதலீட்டாளர்களின் அழுத்தம் மேன்மேலும் அதிகமானது. 2021ஆண்டின் தொடக்கம் முதல் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 315 மில்லியன் பயனர்களை இலக்காகவும், அந்த ஆண்டில் அதன் வருடாந்திர வருவாயை குறைந்தபட்சம் இரட்டிப்பாக்குவதாகவும் நிறுவனம் கூறியது.இதற்கிடையே கொரோனாவும் தாண்டவமாடியது. பல்வேறு இலக்குகள், அழுத்தங்களுக்கு இடையே பயணித்த ஜேக் அடுத்தக்கட்டத்தை யோசித்தே வைத்திருந்தார். அவர் கிரிப்டோகரன்சி பக்கம் பார்வையை ஏற்கெனவே திருப்பியிருந்தார். குறிப்பாக பிட்காயின் மீது.
ட்விட்டரில் இருந்தபோதே கிரிப்டோகரன்சிக்கு தனி குழு உருவாக்கப்பட்டிருந்தது. இப்போது பதவி ஏற்ற அக்ரவாலே அந்த குழுவை நிர்ணயிக்கவும் செய்தார். நிச்சயம் எதிர்காலம் கிரிப்போடொகரன்சியால்தான் என தீர்க்கமாக நம்பியே எதிர்கால தலைவரான அக்ரவாலை அந்தப்பக்கம் ஜேக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இது இப்படி இருக்க பிட்காயின் தொடர்பான ஏதோ ஒரு பெரிய இலக்கை ஜேக் வைத்திருக்கலாம் என்றும், அதனை நோக்கியே அவர் நகர்வார் எனவும் கணிக்கப்படுகிறது.
எந்த நிறுவனத்தில் சி இ ஓக்கள் மாறினாலும் அது மற்றொருமொரு நல்ல கையில்தான் ஒப்படைக்கப்படுகிறது. அதனால் ஜேக்கின் விலகல் ட்விட்டரை எந்த விதத்திலும் பாதிக்காது. அதேபோல் ஜேக்கும் சாதாரண ஆள் இல்லை. 2008ல் ட்விட்டரை விட்டு வெளியேறியபோதே ஸ்கொயரை தொடங்கி லாபத்தை பார்த்தார். அதேபோல் தற்போதும் வெளியேறி இருக்கிறார். இந்த முறையும் அடுத்த அடியை சிறப்பாக எடுத்து வைப்பார் என நம்புகின்றனர் அவர்களது ரசிகர்கள். ஏனோதானவன இருக்கும் நபராக பார்வைக்கு தெரிந்தாலும் ஜேக் மிக உஷாரான ஆள்தான் என அழுத்தி கூறுகின்றனர் டிஜிட்டல் உலகவாசிகள்.