E-Visa: முடிவுக்கு வருகின்றதா பனிப்போர்? கனடா நாட்டினருக்கு இ - விசா வழங்க இந்தியா அனுமதி
E-Visa: சுற்றுலா விசாக்கள் உட்பட அனைத்து விசா சேவைகளும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
ஏறக்குறைய இரண்டு மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு கனேடிய நாட்டினருக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது என்று அதிகாரப் பூர்வமான செய்திகள் வெளியாகியுள்ளன. கனேடியப் பிரஜையான கலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டதில் "இந்திய அரசாங்கத்தின் முகவர்களுக்கு" தொடர்பு இருப்பதாக கனடாவின் அறிக்கை தொடர்பாக தொடரும் பனிப்போருக்கு மத்தியில் செப்டம்பர் 21 அன்று விசா சேவைகள் நிறுத்தப்பட்டன.
அதாவது சுற்றுலா விசாக்கள் உட்பட அனைத்து விசா சேவைகளும் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. வணிக மற்றும் மருத்துவ விசாக்கள் உட்பட குறிப்பிட்ட சேவைகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. செப்டம்பரில், கனடா குடிமக்களுக்கு விசா வழங்குவதை இந்தியா "மறு அறிவிப்பு வரும் வரை" நிறுத்துவதாக அறிவித்தது.
இரண்டு மாத கால இடைநிறுத்தத்திற்குப் பிறகு, கனடா நாட்டினருக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியது என்று ஆங்கில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. வணிகம், கான்ஃபிரன்ஸ் மற்றும் மருத்துவ விசா சேவைகள் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டன. கலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா ஆதரவு அளித்ததை அடுத்து இந்தியா விசா சேவைகளை முன்னதாகவே நிறுத்தி வைத்தது.
ஜூன் மாதம் வான்கூவர் புறநகர் பகுதியில் கனேடிய பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதற்கும் இந்திய முகவர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதை அடுத்து, செப்டம்பர் 21ஆம் ஆண்டு விசா சேவை நிறுத்தப்பட்டது. இதுமட்டும் இல்லாமல் கனடா தனது தூதர்கள் இருப்பைக் குறைக்குமாறு இந்தியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து கனடா தனது தூதரக அதிகாரிகள் 41 பேரை தனது நாட்டிற்கு திரும்ப அழைத்துக்கொண்டது.
கனடா அரசு தெரிவித்துள்ள குற்றச்சாட்டினை இந்திய அரசு மறுத்துள்ளது. மேலும் கனடா தனது குற்றச்சாட்டினை தனது பாராளுமன்றத்தில் தெரிவித்ததால் இந்த பிரச்னை தொடங்கும்போதே மிகவும் பூதாகரமாக தொடங்கியது. இந்தியாவும் பதிலுக்கு தன்மீது இருந்த குற்றச்சாட்டினை மறுத்ததுடன் கனடாவுக்கு பதிலடி கொடுத்து வந்தது. இதனால் கனடாவில் இந்தியர்களுக்கும் இந்தியாவில் கனடர்களுக்கும் அச்சம் ஏற்பட்டது.
தற்போது இந்தியா விசா வழங்க அனுமதி அளித்திருந்தாலும், இரு நாடுகளிலும் இன்னும் பதற்றம் குறையவில்லை. வாஷிங்டனில் உள்ள வில்சன் மையத்தில் உள்ள தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பெரும் நெருக்கடியில் உள்ளது. ஒருவேளை அது எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமானதாக கூட இருக்கலாம். ஒவ்வொரு பக்கமும் நெருக்கடி அதிகரித்துள்ளது என்பதை உணர முடிகின்றது. இந்த நெருக்கடி முற்றிலும் கட்டுப்பாட்டை மீறவில்லை என்பதற்காக நெருக்கடியைத் தீர்க்க இரு நாடுகளிடமும் வலுவான காரணங்கள் உள்ளன என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது" எனக் கூறினார்.
2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி கனடாவில் மொத்தம் 77 ஆயிரம் சீக்கியர்கள் வசிப்பது தெரியவந்துள்ளது. இது பஞ்சாப்பினைக் கடந்து சீக்கியர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.