கைது செய்யப்படுகிறாரா இம்ரான் கான்...? உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான் அரசியல்
இஸ்லாமாபாத் சதார் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் அளித்த புகாரின் பேரில் பிடிஐ தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Politics in Pakistan is getting uglier- Imran Khan is a booked under terrorism act as he threatened to file cases against police and judiciary! pic.twitter.com/ZRGBOY29g7
— Ashok Swain (@ashoswai) August 21, 2022
உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி ஜெபா சவுத்ரியை மிரட்டியதாக இஸ்லாமாபாத் சதார் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் அளித்த புகாரின் பேரில் பிடிஐ தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவரது கட்சியினர் போராட்டம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
மேலும், பிடிஐ மூத்த தலைவர் ஃபவாத் சவுத்ரி, கட்சித் தொண்டர்களை முன்னாள் பிரதமரின் பானி காலா இல்லத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
எப்9 பூங்காவில் நடைபெற்ற பிடிஐ பேரணியில் இம்ரான் கான் பேசியதைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மார்கல்லா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. பிடிஐ துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி, செய்தியாளர்களிடம் பேசுகையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்குமாறு கோரிக்கை விடுத்துளள்ளார்.
இம்ரான் கானின் பானி காலா இல்லத்திற்குச் செல்லும் பாதைகளை போலீசார் தடுப்பு போட்டு மறித்துள்ளதாகவும், அந்த வழியாக அங்கீகரிக்கப்படாத நபர்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழித்தடங்களை மூடுவதற்கு முட்கம்பிகளை போலிசார் பொருத்தினர், அதேசமயம் ஃபிரான்டியர் கார்ப்ஸின் (எஃப்சி) கனரகப் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இம்ரான் கான் சவுக்கின் தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.
இதற்கிடையில், இஸ்லாமாபாத்தில் உரை நிகழ்த்திய போது இஸ்லாமாபாத் காவல்துறை அலுவலர் மற்றும் பெண் மாஜிஸ்திரேட்டை மிரட்டியதற்காக இம்ரான் கானின் உரைகளை நேரடியாக ஒளிபரப்ப பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.
சனிக்கிழமை மாலை பொதுக்கூட்டத்தில் நீதிபதி மற்றும் இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (ஏடிஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.