Hippo : சிறுவனை விழுங்க முயன்ற நீர்யானை: அதிர்ஷ்டவசமா தப்பித்தது எப்படி?
ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவனை பாதி விழுங்கிவிட சுற்றியிருந்தவர்கள் கற்களை வீசி நீர்யானையை திசை திருப்பி சிறுவனை மீட்டுள்ளனர்.
ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் இரண்டு வயது சிறுவன் ஒருவனை பாதி விழுங்கிவிட சுற்றியிருந்தவர்கள் கற்களை வீசி நீர்யானையை திசை திருப்பி சிறுவனை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அதிர வைக்கும் சம்பவம் என்பதில் ஐயமில்லை. உகாண்டாவின் க்வாடே கமாடோரோ ஏரி அருகே சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது அங்கு பசியோடு வந்த நீர் யானை அவனை தலையோடு கவ்வியுள்ளது. சிறுவன் 2 வயதானவன் என்பதால் அதன் பிடியில் இருந்து அப்படி இப்படி கூட அகல முடியவில்லை. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பெரிய பெரிய கற்களை எடுத்து நீர் யானை மீது வீச அது சிறுவனை துப்பிவிட்டுச் சென்றது. உடனே சிறுவனை மீட்டுள்ளனர். போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சிறுவனை மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். சிறுவனுக்கு உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் சிறுவனுக்கு முழு உடல் பரிசோதனை செய்து உரிய சிகிச்சைகளை அளித்தனர். சிறுவனுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. சிறுவன் உடல்நலம் பெற்று வீடு திரும்பிவிட்டார். இதனை ஒட்டி உகாண்டா போலீஸார் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் இதுபோல் நீர்நிலைகள், விலங்கியல் பூங்காவில் விளையாடும் போது பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் யானைகள் தாவர் உண்ணி என்பதால் சிறுவனை சாப்பிடும் நோக்கில் அது கடித்திருக்காது மாறாக அதற்கு ஏதேனும் கோபமோ ஆக்ரோஷமோ இருந்து அதை எதிரிலிருந்த சிறுவனை எதிரியாக பாவித்து தாக்கியிருக்கும் என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு நீர் யானை கொட்டாவி விடுவது போல தனது பெரிய வாயை திறந்து காண்பித்தால், அது சண்டைக்கு தயார் ஆகி விட்டது என்று அர்த்தம். இதையடுத்து எதிரே நிற்கும் நீர் யானை தனது தலையை தாழ்த்தி மண்டியிட்டால் சண்டை வேண்டாம், நான் சமாதானத்திற்கு தயார் என்று அர்த்தம். இரண்டுக்கும் இடையே சண்டை வராது. இதைமீறி இந்த நீர் யானையும் தனது வாயைத் திறந்து காண்பித்தால் அவ்வளவு தான். நானும் சண்டைக்கு தயார் என்பது இதன் பொருளாகும். அடுத்து இரண்டுக்கும் இடையே சண்டை மூண்டு விடும். நீர்யானையின் கடைவாய்ப்பல் பெரிய கொம்பு போல, யானைக்கு தந்தம் இருப்பது போல, நீண்டு இருக்கும். இந்த பல்லால் தனது எதிரியை கடித்து காயப்படுத்தும். இப்படித்தான் அந்த நீர்யானை ஏதோ கோபத்தில் சிறுவனை தாக்கி இருக்கும் எனக் கூறுகின்றனர்.
ஆப்ரிக்க உயிரினம் நீர் யானை:
நீர் யானைகளின் பூர்வீகம் ஆப்ரிக்க வனப்பகுதி. பாலூட்டி இனமான இவை தாவர உண்ணிகள். இவை கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை. ஒரு கூட்டத்தில் சுமார் 40 நீர் யானைகள் வரை இருக்கும். சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் வரை இவை உயிர் வாழும். ஆண் நீர் யானைகளை விட பெண் நீர் யானைகள் உருவத்தில் சிறியதாக இருக்கும். நீர்யானைகள் நீர் மற்றும் நிலத்தில் வசிக்கக்கூடியவை. இருப்பினும் பெரும்பாலான நேரம் இவை தண்ணீருக்குள் தான் தங்கி இருக்கும். தண்ணீருக்குள் மூழ்கி இருந்தாலும் கண்கள், காதுகள் மட்டும் தண்ணீருக்கு வெளியே நீட்டியபடி இருக்கும். இதனால் வெளிப்பரப்பில் நடப்பதை பார்க்கவும், கேட்கவும் அவற்றால் முடியும். தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் போது கண்கள் மற்றும் காதுகளை மூடிக்கொள்ளும். இதற்கு ஏற்ப இவற்றின் உடல் அமைப்பு உள்ளது. பெரும்பாலும் இவை தண்ணீருக்குள் மூழ்கியே இருப்பதால் உடல் வெப்பம் அதிகரிப்பதில்லை. வியர்ப்பதும் இல்லை.
இவற்றின் தோலின் அடிப்பகுதியில் விசேஷ சுரப்பிகள் உள்ளன. இதனால் அவற்றின் உடலில் எண்ணை பசை போன்ற திரவம் சுரந்துகொண்டே இருக்கும். இதனால் இவற்றின் தோல் பகுதி வறண்டு போகாமல் இருக்கும். நீர் யானைகள் இடையே வசிப்பிடம் தொடர்பாக அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதுண்டு.