(Source: ECI/ABP News/ABP Majha)
Gotabaya Rajapaksa : மாலத்தீவிலிருந்து வெளியேறிய கோட்டபய ராஜபக்ச.. அடுத்து என்ன?
மாலத்தீவை விட்டு கோட்டபய வெளியேறியுள்ளதாகவும் சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். ஆனால், அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கபூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கு மத்தியில், இலங்கை அதிபராக சபாநாயகரை நியமிக்க வேண்டும் என மூத்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அதிபர் கோட்டபய ராஜபக்ச நேற்று அதிகாலை மாலத்தீவுகளுக்கு தப்பியோடிய நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்கு செல்ல தனி ஜெட் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு அந்நாட்டு அரசிடம் கோட்டபய கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், முன்னர், உறுதி அளித்தபடி, கோட்டபய இன்னும் அதிபர் பதவியை ராஜிநாமா செய்யவில்லை. இதை தொடர்ந்து, தனியார் ஜெட் ஒன்று மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் கோட்டபய மாலத்தீவை விட்டு வெளியேறவுள்ளதாகவும் உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாலத்தீவை விட்டு கோட்டபய வெளியேறியுள்ளதாகவும் சிங்கபூரை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு மத்தயில், இலங்கையில் எதிர்கட்சிகள் இணைந்து அனைத்து கட்சி அரசை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அரசும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கேட்டு கொண்டு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான மக்கள், அவரது இல்லத்தை கைப்பற்றி, இலங்கை நாடாளுமன்றத்தின் வாயில்களில் குவிந்து வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச உறுதி அளித்தபடி தனது இராஜினாமா கடிதத்தை இன்றைய தினம் அனுப்பி வைப்பார் என நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார். நாட்டின் இடைக்கால அதிபராக பிரதமர் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை அரசின் செய்தி நிறுவனமான ரூபவாஹினியின் தொலைக்காட்சி நிலையத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்ததையடுத்து அதன் ஒளிபரப்பை சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டது. பின்னர், ஒளிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
செவ்வாய் இரவு கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, கோட்டபய, அவரது மனைவி, அவரது பாதுகாவலர்கள் என நான்கு பேர் Antonov-32 ராணுவ விமானத்தின் மூலம் மாலத்தீவுகளுக்கு கிளம்பியதாகக் கூறப்படுகிறது. மாலத்தீவுகளுக்கு சென்ற அவர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர் என விமான நிலைய அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.