Rajapakse Website Block | ராஜபக்சேவின் இணையதளம் திடீர் முடக்கம் : என்ன நடந்தது?
சைபர் அட்டாக் எனப்படும் இணையத் தாக்குதலுக்கு இலங்கையின் பிரதமரான மகிந்த ராஜபக்சவும் இலக்காகி இருக்கிறார்.
எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் நேருக்கு நேர் மோதிப் பார் எனச் சொல்லும் வீரமும் தீரமும் எல்லா மனிதரிடமும் உண்டு.. ஆனால் இப்போது இருக்கிறதா எனக் கேட்டால், ஆம் எனச் சொல்லிவிட முடியாது. ஆம், தகவல்நுட்ப யுகமான இன்றைய காலகட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் திடீர் தாக்குதலை, ஆகப் பெரிய அமெரிக்க வல்லரசும்கூட எதிர்கொள்ள முடியாமல் தவிப்பதைப் பார்க்கமுடிகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பதைப் போல, நல்லவிதமாக அல்ல, அமெரிக்காவுக்கே அல்வா தரும் ஆள்களும் தகவல் தொழில்நுட்பத்தில் இருக்கிறார்கள் என்பதை சாதாரணமாகக் கடந்துவிட முடியாது.
அப்படி ஒரு சைபர் அட்டாக் எனப்படும் இணையத் தாக்குதலுக்கு இலங்கையின் பிரதமரான மகிந்த ராஜபக்சவும் இலக்காகி இருக்கிறார். நேற்று அவருடைய அதிகாரபூர்வமான இணையதளத்தை, இணைய வன்முறையாளர்கள் யாரோ முடக்கியுள்ளனர். https://www.mahindarajapaksa.
இந்த முகவரியைச் சொடுக்கினால், இலங்கை பிரதமரின் அதிகாரபூர்வ இணையதளத்துக்குக் கூட்டிச்செல்லும். ஆங்கிலத்தில் முதன்மையாகவும் சிங்களத்திலும் தமிழிலுமாகவும் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று நாயகர்களைக் குறிப்பிடும்போது சொல்வதைப் போல, மகிந்த யுகம், அமைதி, வெளியுறவு என பல சங்கதிகளும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல நேற்று இந்தத் தளத்தைத் திறந்து பார்த்தவர்களுக்கு சற்றே அதிர்ச்சி காட்டிவிட்டார்கள், அடையாளம் தெரியாத இணைய வன்முறை ஆசாமிகள். நேராக அது இன்னொரு டிஜிட்டல் நாணயத்தின் இணையதளத்துக்குக் கொண்டுபோய் விட்டிருக்கிறது. அதிலிருந்து மீண்டும் இன்னொரு இணையதளத்துக்கும் இழுத்துச்சென்றுள்ளது.
சில மணிநேரங்களில் இலங்கை அரசு அதிகாரிகள் இதைச் சரிசெய்துவிட்டனர். ஆனாலும் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மகிந்த ராஜபக்சவின் இணையதளத்தையே கைவைத்துவிட்டார்களே என கடும் கோபம் அடைந்துவிட்டார்கள், இலங்கை அரசின் உயர் அதிகாரிகள்.
இதற்கிடையே, இலங்கை தகவல்நுட்ப அமைப்பின் தலைவர் ராஜிவ் யாசிரு குருவிட்ட இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ”யார் இணையதளத்தை முடக்கியவர்கள் என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம். இணையத்தாக்குதல் கும்பல் தளத்தின் உள்ளடக்கத்தை அவர்களின் கணினியிலோ கைபேசியிலோ தானாகப் பதிவிறக்கம் ஆகும்படி செய்திருக்கவேண்டும். அதன் மூலமாகவே இவ்வாறு செய்ய வாய்ப்பிருக்கிறது.” என்று கூறினார்.