Video: பரபரப்பு.! தேர்தல் தலைவர் மீது கருப்பு மையை ஊற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர்: நடந்தது எங்கு?
Georgia Election Commission chairman: ஜார்ஜியாவில் தேர்தல் முடிவை அறிவிக்க தயாராக இருந்த தேர்தல் தலைவர் மீது, எதிர்க்கட்சி உறுப்பினர் கருப்பு ஊற்றிய நிகழ்வானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜியா தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக,ஜார்ஜியாவின் எதிர்க்கட்சியினரும் அமெரிக்காவும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன.
ஜார்ஜியா தேர்தல்:
ஜார்ஜியா நாடானது , மத்திய கிழக்கு ஆசியாவில் கருங்கடல் ஒட்டிய நாடாகும். இங்கு கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தலானது நடைபெற்றது. தேர்தலில் , வாக்கெடுப்பின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்க ஆரம்பித்தனர். மேலும், எதிர்க்கட்சியினர் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையர் மீது தாக்குதல்:
இந்த தருணத்தில் , நேற்று தேர்தல் முடிவுகளை அறிவிக்க தேர்தல் ஆணையம் தயாரானது. அப்போது, முன்னாள் ஜனாதிபதி மைக்கேல் சாகாஷ்விலியின் ஐக்கிய தேசிய இயக்கத்தின் (யுஎன்எம்) கட்சி உறுப்பினர் டேவிட் கிர்டாட்ஸே என்பவர் , தேர்தல் ஆணையர் மீது கருப்பு மையை ஊற்றினார். இந்த செயலானது, அங்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்ஜியா தேர்தல் ஆணையத் தலைவர் ஜியோர்கி கலந்தரிஷ்விலி மீது கருப்பு மை சாயமானது, அவரது கண்ணில் சற்று பாதிப்பை ஏற்படுத்தியதாக உள்ளூர் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
”ரஷ்யா தலையீடு”
இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின்னர் தேர்தல் முடிவானது அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவில்,150 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 89 இடங்களில், ஆளும் கட்சியான ஜார்ஜியன் ட்ரீம் கட்சியானது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆளும் கட்சியான ஜார்ஜியன் ட்ரீம் கட்சியானது ரஷ்ய சார்பு ஆதரவுடைய கட்சியாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த தருணத்தில், தேர்தல் முறைகேடு நடைபெற்றதாகவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோர்ஜியாவின் தேர்தல் ஆணையத் தலைவர் மீது மை வீசப்பட்டது. திபிலிசியில் நடந்த ஜோர்ஜியாவின் தேர்தல் அமைப்பின் கூட்டத்தில் ஜியோர்ஜி கலந்தரிஷ்விலி எதிர்க்கட்சி அதிகாரி டேவிட் கிர்டாட்ஸால் தாக்கப்பட்டார். #georgiaelections pic.twitter.com/25CdXoPvnb
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 17, 2024
இந்நிலையில், தேர்தல் ஆணையர் மீது, கருப்பு மை ஊற்றிய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.