Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!
சீன உளவு கப்பல் இலங்கையில் இருப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து உளவு கப்பல் ஒன்று இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வருவதற்கு அனுமதி கேட்டிருந்தது. இந்தக் கப்பலுக்கு முதலில் அனுமதி மறுத்த இலங்கை அரசு தற்போது அந்தக் கப்பல் நுழைவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. சீனாவின் உளவு கப்பல் இன்று ஹம்பன் தோட்டா துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தச் சீன கப்பல் யுவான் வாங்-5 நீர் வழி தாக்குதல் நடத்தக்கூடிய ஆயுதங்களை வைத்திருக்கும் வசதியை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் இங்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அண்டை நாட்டில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் இந்தியா எப்போதும் உற்று நோக்கி பார்க்கும். அத்துடன் அந்த விஷயங்களை மிகவும் கவனமாக பார்ப்போம். ஆகவே தற்போது இலங்கையில் நடந்து வரும் விஷயங்களையும் கவனமாக பார்த்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
யுவான் வாங் 5 என்ற அந்த கப்பல், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனக்கூறப்படும் நிலையில், உளவு பார்க்கவும் அந்த கப்பல் பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாலும் இலங்கையில் செல்வாக்கு செலுத்துவதையும் இந்தியா சந்தேக கண்களிலேயே பார்த்து வருகிறது.யுவான் வாங் 5 கப்பல், முதலில் ஆகஸ்ட் 11 அன்று இலங்கையில் சீனாவால் பராமரிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருந்தது.
பின்னர், இந்தியா கவலை தெரிவித்ததையடுத்து, கப்பல் வருகையை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிற்கு இலங்கை கோரிக்கை விடுத்தது.இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கவலை தெரிவித்த போதிலும், கப்பலை ஏன் நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்பது குறித்து திருப்திகரமான பதிலை அளிக்க இந்திய தரப்பு தவறிவிட்டதாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த விவகாரம் குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆகஸ்ட் 12, 2022 அன்று சீன தூதரகம் மூலம் அமைச்சகத்திற்கு யுவான் வாங் 5 கப்பல் 16 ஆகஸ்ட் 2022 அன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டு, பொருள்களை நிரப்ப அனுமதி கோரி விண்ணப்பித்தது.
அனைத்து ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13, 2022 அன்று, கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சீன தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு தென்கிழக்கே சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் சீனக் கப்பல் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகத்தை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந்ததாக இலங்கை துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 1.12 பில்லியன் டாலர்களுக்கு 99 ஆண்டுகளுக்கு சீனாவிற்கு இலங்கை குத்தகைக்கு வழங்கியுள்ளது. அதனைக் கட்டுவதற்கு சீன நிறுவனத்திற்கு இலங்கை 1.4 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்புக்கு யுவான் வாங் 5 பயன்படுத்தப்படலாம் என்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பயன்பாடுகளை அக்கப்பல் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்