Super She Island : இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் இருக்கு.?
Super She Island : ஆண்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பெண்களும் போட்டி போட்டு வளர்ந்து வரும் நிலையில், பெண்களை மட்டுமே அனுமதிக்கப்படும் ஒரு தீவு உள்ளது. இங்கு முற்றிலும் ஆண்களுக்கு அனுமதி இல்லை- அப்படி அந்த தீவில் என்ன தான் சிறப்பம்சம் என்பதை பார்க்கலாம்.

விடுமுறையில் சுற்றுலா கொண்டாட்டம்
நாளுக்கு நாள் இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு எப்போதாவது கிடைக்கும் விடுமுறை தான் சற்று ஓய்வை கொடுக்கும், அதிலும் தொடர் விடுமுறை கிடைத்தால் ஒரே கொண்டாட்டம் தான். அந்த வகையில் நண்பர்கள், உறவினர்களோடு சுற்றுலாவிற்கு பறந்து விடுவார்கள். அதிலும் ஆண்கள் பெண்கள் என மொத்தமாக சென்று கும்மாளமிடுவார்கள்.
ஒரு சிலர் யாருடைய தொந்தரவும் இருக்க கூடாது என்பதற்காக தனியாக அமைதியான இடத்தை தேடி செல்வார்கள். அந்த இடங்களிலும் ஆண்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். அப்படி கூட்டமே இருக்க கூடாது பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்காகத்தான் சூப்பரான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஆமாம்.. பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு இருப்பதாகவும், இங்கு ஆண்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லையென வெளியாகியுள்ள புதிய தகவல் தான் பெரும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பெண்களுக்கான தனித்தீவு
அப்படி அந்த தீவில் என்ன தான் ரகசியம் உள்ளது என்பதை பார்க்கலாம். பின்லாந்து ஹெல்சின்கி அருகே பால்டிக் கடலில் அமைந்துள்ளது தான் சூப்பர்ஷீ (SuperShe) தீவு. பின்லாந்தின் ஹெல்சின்கி விமான நிலையத்திலிருந்து 75 நிமிடங்கள் தொலைவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் கடலால் சூழப்பட்ட இந்த தீவானது 8.47 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த தீவில் அழகான மரங்கள், வெள்ளை வெள்ளையென கடல் மணல் என ரம்மியமான காட்சியளிக்கிறது. இந்த அழகான தீவை உருவாக்கியவர் கிறிஸ்டினா ரோத் என்கிற தொழிலதிபராவார். பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வணிக நிறுவனத்தை நடத்தி வந்த கிறிஸ்டினா ரோத் அந்த நிறுவனத்தை விற்பனை செய்து விட்டு தீவு ஒன்று வாங்கியுள்ளார். அதற்கு SuperShe என்கிற பெயரையும் சூட்டியுள்ளார்.
பெண்களுக்கான தனித்தீவு- உள்ளே உள்ள ரகசியம் என்ன.?
இந்த தீவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். பெண்களுக்காக உருாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர்ஷீ தீவில் தங்குவது ஒரு அசாதாரண அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீவில் பெண்களுக்கு மட்டும் பிரத்தியோகமாக ஆரோக்கிய யோகா, ஆரோக்கியமான இயற்கை உணவுகள், காடுகளுக்குள் நடை பயணம், நீச்சல், மசாஜ், இயற்கை அழகுக்கான வழிமுறை உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. தப்பி தவறி கூட இந்த தீவில் ஆண்களுக்கு அனுமதி இல்லை. இந்த தீவு முழுவதும் பெண்கள் தான் ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தீவில் பெண்களுக்கு உடல், மனம், அழகை மேம்படுத்த இயற்கை முறை ஆலோசனைகள் மற்றும் ஆன்மாவை வலுப்படுத்தும் செயல்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு அனுமதி இல்லை
பெண்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த SuperShe தீவில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு மையத்தில், தினசரி எலக்ட்ரானிக் வாழ்க்கையின் பரபரப்பை தூக்கி போட்டுவிட்டு கடலின் அமைதியான அலை ஓசையும், பைன் மரங்களின் காற்றோசையும் அனுபவிக்க முடியும். இந்த தீவில் ஒரே நேரத்தில் அதிகளவில் பெண்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குறைவான எண்ணிக்கையான பெண்கள் குழு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என அந்த தீவை உருவாக்கிய கிறிஸ்டினா ரோத் தெரிவித்துள்ளார்.





















