SriLanka Crisis: இலங்கையில் அடுத்தடுத்து பதவி விலகும் அமைச்சர்கள்... இதுவரை 5 பேர் ராஜினாமா
இலங்கையில் தற்காலிக அதிபராக அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மக்கள் போராட்டம் மிகத் தீவிரமாக வெடித்துள்ள நிலையில் அங்கு பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாமல் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவும் பதவியேற்றார்.
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பது போல அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனிடையே நேற்று காலை முதல் அந்த நாட்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதிபர் மாளிகையை ஒரே நேரத்தில் ஆயிரக்ணக்கான மக்கள் முற்றுகையிட்டதால் காவல்துறையினராலும், ராணுவத்தாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், மக்களின் போராட்டத்திற்கு அச்சமடைந்த கோத்தபய ராஜபக்ச தனது அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பி ஓடினார்.
மேலும் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை வரும் 13 ஆம் தேதி ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய மட்டுமின்றி ரணில் விக்கிரமசிங்கவும் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளதால் நாட்டின் தற்காலிக அதிபராக அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்தயப்பா அபய்வர்தேன பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மக்கள் போராட்டத்தால் கடந்த மாதம் அமைச்சர் பதவியிலிருந்து நமல் ராஜபக்ச விலகினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் பந்துலா குணவர்தனா தனது பதவியை ராஜினாமா செய்ததோடு மட்டுமல்லாம் தான் சார்ந்த இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியில் இருந்தும் விலகினார். மேலும் அமைச்சர்கள் ஹரின் ஃபெர்னாண்டோ மற்றும் மனுஷா நானயக்காரா ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். நிலைமை இப்படியிருக்கையில் இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் தம்மிக்க பெரேரோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பலரும் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்