பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளி ராய்.. 100,000 மக்கள் வெளியேற்றம்.. என்ன நடக்கிறது?
பிலிபைன்ஸ் நாட்டை மிகவும் கடுமையான சூறாவளி புயல் தாக்கியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஒரு சக்தி வாய்ந்த சூறாவளி புயல் ஒன்று தாக்கியுள்ளது. இந்தப் புயல் கடுமையான பாதிப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கியபோது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் தங்களுடைய இடத்தை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது.
மேலும் இந்த சூறாவளி புயல் காரணமாக சுமார் 10 ஆயிரம் கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயலுக்கு ராய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்புயல் பசிபிக் கடலில் இருந்து சியார்கோ தீவுகளுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே பிலிப்பைன்ஸ் நாடு கொரோனா நோய் தொற்றில் தீவிரமாக பாதிப்பு அடைந்துள்ளது. அங்கு தற்போது 28 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர்.
இதற்காக பிலிப்பைன்ஸ் அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டது. அதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று ஓரளவு குறைந்தது. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக இயல்பு நிலைக்கு வருவதற்குள் ராய் புயல் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மீட்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுவாக பிலிப்பைன்ஸ் நாடு ரிங்க் ஆஃப் ஃபையர் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டு தோறும் அடிக்கடி நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு இயற்கை சீற்றம் அங்கு நடைபெற்றுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் நாடு முழுமையாக வெளியே வர சில நாட்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது. இந்த புயலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ”உயரமான மாணவி” ஆசிரியை ஷேர் செய்த ஃபோட்டோ.. வைரலாகும் லீனா நாயரின் ரெஸ்பான்ஸ்..