டெல்டா ப்ளஸ் கொரோனா; 11 நாடுகளில் இதுவரை எத்தனை பாதிப்புகள் தெரியுமா?
இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் ஏற்பட்ட அதிகளவிலான உயிரிழப்புகள் எல்லாம் ஒருவேளை இது மாறுபட்ட கொரோனா வைரசாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
கொரோனா வைரசின் புதிய மாறுபாடான டெல்டா ப்ளஸ் கொரோனாவில் இதுவரை 11 உலக நாடுகளில் 197 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இந்தியாவில் 2 அலையின் பாதிப்பு இதன் காரணமாகத் தான் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தொடங்கி பல்வேறு பாதிப்புகளை இன்னமும் அரங்கேற்றி வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலை என இருந்த கொரோனாவின் பாதிப்பு தற்போது புதிய உருமாற்றம் பெற்று டெல்டா ப்ளஸ் கொரோனாவாக மாறியுள்ளது. இதன் பாதிப்பினை கட்டுப்படுத்தாவிடில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் புதிய உருமாறிய கொரோனாவின் பாதிப்பு உலக நாடுகளில் கால் பதிக்க தொடங்கிவிட்டது. இந்நேரத்தில் முதலில் நாம் இந்த உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன? என தெரிந்து கொள்வோம்..
டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவத்தின் தகவலின்படி, தற்பொழுது உலகெங்கிலும் மாறுபட்ட பரிமாண வளர்ச்சியுடன் டெல்டா வைரஸ் உருமாறியுள்ளது. இந்த உருமாறிய டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் கே 417என் பிறழ்வாழ் வகைப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் போதோ மக்களுக்கு தொற்று அதிகளவில் பரவியதோடு நுரையீரலில் உயிரணுக்களுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது மற்றும் நோய் எதிர்ச்சக்தியினை குறைத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தி அதிகளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த பாதிப்புகள் எல்லாம் ஒருவேளை இது மாறுபட்ட கொரோனா வைரசாக இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் ஆராய்ந்து வருகிறது. மேலும் தொடர்ந்து உருமாறி வரும் கொரோனாவின் புதிய வைரஸ்களை கவலைக்குரிய மாறுபாடு மற்றும் நலனுக்குரிய மாறுபாடு என இரு வகையாக உலக சுகாதார நிறுவனம் பிரித்து உள்ளது. இதில் டெல்டா பிளஸ் தொற்று கவலைக்குரிய மாறுபாடாக கண்டறியப்பட்டு உள்ளது. எனினும் பரவல் விவகாரத்தில் இந்த வைரசில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா ப்ளஸ் கொரோனா இதுவரை எங்கெல்லாம் கண்டறியப்பட்டது?
கடந்த ஜீன் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் 11 உலக நாடுகளிலிருந்து 197 வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரிட்டனில் 36, கனடா-1, இந்தியா -8, ஜப்பான்- 15, நோபால்-3, போலாந்து-9, போர்ச்சுகல்- 22, ரஷ்யா- 1, சுவிட்சர்லாந்து-18, துருக்கி -1, அமெரிக்கா- 83 என புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கணக்கீடு இல்லாமல், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப்பிரதேசத்தில் 40 உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதோடு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பிரிட்டனில் தொடர்ந்து 5 பேருக்கு உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா நோய் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நேபால் மற்றும் துருக்கி நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த உயிரிழப்புகளும் லண்டன் மற்றும் இந்தியாவில் ஏற்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தான், கொரோனா வைரஸின் இந்த மாறுபாடுகளை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்துக் கண்காணித்து வருகிறது. மேலும் எந்தளவிற்கு கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனாவினைக் கட்டுப்படுத்துகிறது என சோதிக்கும் முயற்சி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த கொரோனாவின் மாறுபாடு பொதுவானதாக தெரியவில்லை எனவும் தற்போது சிறிய பகுதிகளில் மட்டுமே இந்த மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் இந்த தொற்று அதிகரித்தால் நிச்சயம் பாதிப்புகள் உள்ளாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் புதிய வகையான டெல்டா ப்ளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதனை தடுக்கும் முயற்சியில் மருத்துவக்கண்காணிப்பு, தடுப்பூசி செலுத்துவதற்கு முக்கியத்துவம் மற்றும் சுகாதார அமைப்பினை மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவின் 3 வது அலைக்கு இந்த வைரஸ் வழிவகுக்காது எனவும் ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானி தருண் பட்நகர் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இந்த புதிய வகை கொரோனாவின் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது வல்லுநர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.