”எங்க ராணுவ விமானங்களை திருப்பி கொடுத்துட்டா எல்லாருக்கும் நல்லது...” எச்சரிக்கை விடும் தலிபான்..!
ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானங்களை பயன்படுத்த யாருக்கும் உரிமை இல்லை என தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்ட தங்களது ராணுவ விமானங்களை எந்த நாடும் பயன்படுத்த தலிபான்கள் அனுமதிக்காது என தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காபூலில் நடந்த விழாவில், பாதுகாப்பு அமைச்சர் மவ்லவி முகமது யாகூப் முஜாஹித் செவ்வாய்கிழமை பேசுகையில், “ஆப்கானில் இருந்து வெளி நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ராணுவ விமானங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். ராணுவ விமானங்களை எடுத்துச் சென்ற நாடுகள் அவற்றை திருப்பி அளிக்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும். தஜிகிஸ்தான் அல்லது உஸ்பெகிஸ்தானில் இருக்கும் எங்கள் விமானங்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். இந்த விமானங்களை வெளிநாட்டில் வைத்து இருக்கவோ அல்லது அந்தந்த நாடுகள் பயன்படுத்தவோ எங்களால் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் முகமது யாகூப் முஜாஹித் தெரிவித்துள்ளார்
பாலமேடு ஜல்லிக்கட்டைக் காண...
"முந்தைய அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, 40 க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டன" என்று அவர் கூறினார்.
அந்த அரசு வீழ்வதற்கு முன்னர், ஆப்கானிஸ்தானிடம் 164 ராணுவ விமானங்கள் இருந்தன. இப்போது 81 ராணுவ விமானங்கள் மட்டுமே நாட்டில் உள்ளன. மீதம் உள்ள விமானங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டு பல்வேறு நாடுகள் அதனை பயன்படுத்தி வருவதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய போது அந்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுமே பரபரப்பாக இருந்தது. ஆப்கானிஸ்தான் தாலிபன்களின் வசம் சென்ற பிறகு, நாட்டை விட்ட வெளியேற பல்லாயிரக்கணக்கானோர் விமானநிலையத்துக்கு விரைந்தனர். அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முழுமையாக வெளியேறியதை அடுத்து விமான சேவையும் நிறுத்தப்பட்டது. கத்தார் அரசின் உதவியுடன் விமான சேவையை மீண்டும் தொடங்கும் பணியில் தாலிபான் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. அந்நாட்டில் ஏராளமான வெளிநாட்டினர் தற்போதும் சிக்கியுள்ளனர். தங்கள் நாட்டு குடிமக்களை மீட்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகளும் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மக்கள் உட்பர் 200 பேர் வெளி நாட்டுக்கு செல்ல தாலிபான் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து காபூலில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இனி வருங்காலத்தில் மேலும் சில சர்வதேச விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்தனர். விமானத்தில் இடம் கிடைக்காததால் சிலர், விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி பயணித்து உள்ளனர். விமானம் உயரே பறந்த நிலையில், தொங்கியபடியே 3 பேர் வானிலிருந்து கீழே விழும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.