China Vs Trump: அணு ஆயுத சோதனை; ட்ரம்ப் புகாருக்கு சீனா மறுப்பு - என்ன சொல்லியிருக்காங்க பாருங்க
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுத சோதனைகளை நடத்திவருவதாக கூறியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து சீனா கூறியது என்ன தெரியுமா.?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்திய பேட்டி ஒன்றில், சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அதன் காரணமாக, தாங்களும் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சோதனைக்கும் உத்தரவிட்டார். இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
அணு ஆயுத பயன்பாடு - உறுதி அளித்த சீனா
அணு ஆயுத சோதனை குறித்த ட்ரம்ப்பின் குற்றச்சாட்டை மறுத்து, சீன வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற தங்களது நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, எந்த சூழலிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதி அளிப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைபிடித்து வருவதாகவும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானா விதித்துக்கொண்ட தடையை பின்பற்றுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதேபோன்று, உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாக்க அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியது என்ன.?
இதனிடையே, பொறுப்பான அணு ஆயுத நாடாக, சீனா எப்போதும் அமைதியான வளர்ச்சியின் பாதையை கடைபிடித்து வருகிறது என்றும், அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுவதாகவும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்காப்பு அணுசக்தி மூலோபாயத்தை சீனா நிலைநிறுத்துவதாகவும், அணு சோதனையை நிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"சர்வதேச அணு ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை ஆட்சியைப் பாதுகாக்கவும், உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கவும் வாஷிங்டன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்" என்று பெய்ஜிங் நம்புவதாகவும் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் ரகசிய அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த காலங்களில், அணு ஆயுதங்களின் அழிவு சக்தி காரணமாக, அதன் சோதனைகளை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டதாகவும், ஆனால், தற்போது நிலையை மாறிவிட்டதாகவும் ட்ரம்ப் கூறினார்.
இதன் காரணமாக, அமெரிக்காவும் அணு ஆயுத சோதனையை மீண்டும் நடத்த உள்ளதாகவும் கூறிய அவர், மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்த தயாராகும்படி பென்டகனுக்கு உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான், தற்போது சீனா அந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளது. மறுபுறம், அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை தொடங்கினால், தாங்களும் அதை செய்வோம் என ரஷ்யா பகிரங்கமாகவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.





















