"நீங்க ரொம்ப பாப்புலர்..எனக்கு பிரச்னைய உருவாக்கிட்டு இருக்கீங்க.." பிரதமர் மோடியிடம் ஓப்பனாக பேசிய அமெரிக்க அதிபர் பைடன்..!
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு தங்களிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
ஜப்பான் ஹிரோஷிமாவில் நேற்று முன்தினம் தொடங்கிய ஜி7 உச்ச மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்பேரில், நேற்று முன்தினம் ஜப்பான் புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, ஜி7 உச்சி மாநாட்டுக்கு நடுவே நடைபெற்ற குவாட் அமைப்பின் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் பிரதமர் ஆன்டணி அல்பனீஸ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.
மோடியிடம் வியந்து போன அதிபர் பைடன்:
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு தங்களிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் ஆகியோர் மோடியிடமே கூறியுள்ளனர். வரும் 23ஆம் தேதி, சிட்னியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் மோடி உரையாட உள்ளார்.
அதேபோல, பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு விருந்து அளிக்கப்பட உள்ளது. இந்த இரு நாட்டு பயணத்தின்போதும், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சிக்கான டிக்கெட் கேட்டு, பல முக்கிய புள்ளிகள் தங்களை தொடர்பு கொண்டதாக பைடன், ஆன்டணி அல்பனீஸ் கூறியுள்ளனர்.
"சிட்னியில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கான டிக்கெட் பலர் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், என்னால் அவர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அந்த அரங்கில் 20,000 பேர் வரை அமரலாம். ஆனால், எனக்கு இன்னும் டிக்கெட்டுகளுக்கான கோரிக்கைகள் வந்து கொண்டு இருக்கிறது" என ஆன்டணி அல்பனீஸ் பேசியுள்ளார்.
"ஆட்டோகிராப்பை வாங்கி கொள்ள வேண்டும்"
இதே போன்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பைடன், "நான் உங்கள் ஆட்டோகிராப்பை வாங்கி கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நீங்கள், எனக்கு உண்மையான பிரச்னையை ஏற்படுத்துகிறீர்கள்.
வாஷிங்டனில் அடுத்த மாதம், உங்களுக்கு இரவு விருந்து அளிக்க உள்ளோம். நாடு முழுவதும் எல்லோரும் வர விரும்புகிறார்கள். ஆனால், டிக்கெட் தீர்ந்து விட்டது. நான் விளையாடுவதாக நினைக்கிறீர்களா? என் குழுவிடம் கேளுங்கள்.
எனக்கு தொலைபேசி வருகிறது. நான் இதுவரை கேள்விப்படாத நபர்களிடமிருந்து அழைப்புகள் வருகிறது. சினிமா நட்சத்திரங்கள் முதல் உறவினர்கள் வரை அனைவரும் அழைத்து டிக்கெட் கேட்கிறார்கள். நீங்கள் மிகவும் பிரபலமானவர்" என்றார்.