Coporate Scam: தாராள பிரபுக்களே..! மொட்டையடிக்கும் கார்ப்ரேட், உணவு To ஆடை வரை - கோமாளிகளாக்கும் ஸ்கேம்
Coporate CSR Scam: தொண்டு நன்கொடை என்கிற பெயரில் பொதுமக்களிடையே, கார்ப்ரேட் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Coporate CSR Scam: சுய லாபம் மற்றும் வருவாயை பெருக்குவதற்காக தொண்டு நன்கொடை என்கிற பெயரில் பொதுமக்களிடையே, கார்ப்ரேட் நிறுவனங்கள் பணத்தை வசூலித்து வருகின்றன.
நன்கொடை பெயரில் ஸ்கேம்
கார்ப்ரேட் நிறுவனங்கள் என்பது ஒரு காலத்தில் பெருநகரங்களுக்கானதகவே இருந்தது. ஆனால், இன்று இரண்டாம் நிலை நகரங்கள் வரை கார்ப்ரேட் நிறுவனங்களின் கிளைகளையும், சேவைகளையும் அணுக முடிகிறது. ஆன்லைனில் உணவு டெலிவெரி செய்வது தொடங்கி, இறக்குமதி செய்யப்பட்ட ஆடைகள்.,மின்சார சாதனங்கள் என கூறி உள்நாட்டில் கடை போட்டு விற்பனை செய்வது வரையிலான பல பிரிவுகளிலும் கார்ப்ரேட் நிறுவனங்கள் வலுவாக காலூன்றி உள்ளன. அத்தகைய கடைகள் அல்லது சேவைகளை அணுகியபிறகு கட்டணத்தை செலுத்தும்போதெல்லாம், “சார், தொண்டு நிறுவனத்திற்காக ஒன்று/இரண்டு ரூபாயை எடுத்துக்கொள்ளலாமா?” என கேட்கும் அனுபவத்தை நீங்கள் கட்டாயம் எதிர்கொண்டு இருப்பீர்கள். ஆனால், அதன் மூலம் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
தாராள பிரபுக்கள் கவனத்திற்கு..!
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும்போது அல்லது கடைகளுக்கு சென்று எடுத்த ஆடைகளுக்கான கட்டணத்தை செலுத்தும்போது, தொண்டு நன்கொடை என கேட்டதுமே எந்தவித ஆலோசனையும் இன்றி தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் என்பதே பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது. காரணம் மக்களிடையே இயல்பாகவே நிலவும் மனிதாபிமானம் மற்றும் ஏழை குழந்தைகளுக்கு என கூறியும் பணம் தராவிட்டால் சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அச்சமுமே ஆகும். மனிதனின் இந்த பலவீனங்களை பயன்படுத்தியே பெரு நிறுவனங்கள் வெட்ட வெளிச்சத்திலேயே பெரும் ஊழலை நடத்தி வருகின்றன. நாளொன்றிற்கு சுமார் 1 கோடி பேர் ஆன்லைன் மூலமாக உணவு டெலிவெரி, சினிமா டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆடைகளை வாங்குவதாகக் கருதினால், அவர்கள் சுமார் 75 லட்சம் பேர் தலா 2 ருபாயை நன்கொடையாக கொடுத்தாலே 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக வசூலாகும். இதுவே மாதத்திற்கு 45 கோடி ரூபாய். அந்த பணத்தை பெருநிறுவனங்கள் எப்படி செலவு செய்கின்றன? எந்த அடிப்படையில் செலவு செய்கின்றன? என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

மொட்டை அடிக்கும் தொண்டு நிறுவனங்கள்
இந்தியாவில் உள்ள பெருநிறுவனங்கள் தங்களது முந்தைய மூன்று ஆண்டுகளின் நிகர லாபத்திலிருந்து 2 சதவிகிதத்தை ஒதுக்கி, சமூக நலப்பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. இது Corporate Social Responsibility (CSR) அதவாது பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு என குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த இரண்டு சதவிகித பங்களிப்பை கூட விட்டுக்கொடுக்க மனமில்லாத பெருநிறுவனங்கள், தொண்டு நன்கொடை என வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் பறிக்கிறது. அந்த தொகையை நிறுவனத்தின் அறக்கட்டளைகளுக்கு மாற்றி, தங்களது சார்பிலேயே சமூக சேவைகள் செய்யப்படுவதாக மோசடி செய்து வருகின்றன. மேலும், நிறுவனத்தின் சொந்த செலவுகளுக்கும் சட்டப்படி பயன்படுத்திக் கொள்கிறது.

பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
தொண்டு நன்கொடை என்ற பெயரில் பெருநிறுவனங்கள் இப்படி வசூலிப்பது, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றமாகும். டிக்கெட் அல்லது உணவை ஆன்லைனில் புக் செய்யும்போது உங்களது பில்லை சற்றே கூர்ந்து கவனியுங்கள். அதில் டொனேஷன் பாக்ஸ் என கூறி ஏதேனும் ஒரு தொகை கட்டணத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால், தேசிய நுகர்வோர் ஹெல்ப்-லைனிற்கு செயலி மூலமாகவோ அல்லது 8800001915 என்ற எண் மூலமாகவோ புகார் அளிக்கலாம். காரணம் பெருநிறுவனங்கள் ஏழை, எளியோரை சுரண்டி கோடிக்கணக்கான ரூபாயை வருவாயை ஈட்டுகிறது. அதிலிருந்து ஒரு சிறு தொகையை ஆவது சமூக மேம்படுத்தலுக்காக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, CSR சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதற்கான பணத்தையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாடிகையாளர்களாகிய பொதுமக்களிடமிருந்தே பெருநிறுவனங்கள் சுரண்டுவது மிகப்பெரிய குற்றமாகும்.























