Amazon Layoff: 20 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப்போகும் அமேசான்...? அதிர்ச்சியில் பணியாளர்கள்...
உலகம் முழுவதும் பெரு நிறுவனங்கள் பணிநீக்கம் அதிகரித்து வரும் நிலையில் அமேசான் மிகப்பெரிய அளவில் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனத்தில் இருந்து சுமார் 20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமேசானில் ஒரு பெரிய அளவிலான பணிநீக்கம் வரும் மாதங்களில் நடைபெறும் என்று தகவல்கள வெளியாகியுள்ளது. மேலும் நிறுவனத்தின் பல பிராந்தியங்களில் உள்ள அவர்களின் விநியோக மையங்களில் இருந்து மக்களை நீக்கம் செய்ய உள்ளார்கள். நிறுவனம் தங்கள் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகிகளையும் பணிநீக்கம் செய்ய உள்ளது.
பணிநீக்கம் குறித்து ஏற்கனவே தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியால் சுட்டிக்காட்டப்பட்டது, இருப்பினும், பணிநீக்கம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. நவம்பரில், இது குறித்து செய்தி வெளியிட்டிருந்த தி நியூயார்க் டைம்ஸிடம் அந்த நிறுவனம் தாங்கள் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. இந்த எண்ணிக்கை 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களை பணிநீக்கம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
முன்னதாக, ட்விட்டர் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர், பேஸ்புக், மெட்டா, அமேசான் இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. அந்த வகையில் தற்போது ஓயோ நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதுடன் 250 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த முடிவு செய்துள்ளது.
முன்னதாக கொரோனா காலத்தில் பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் பல முக்கிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை நிரந்தரமாக மூடி செலவுகளைப் பெரிய அளவில் குறைத்தது.
செலவு குறைப்பு நடவடிக்கை:
ஓயோ குழுமம் தனது நிறுவனத்தின் பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்க முடிவெடுத்துள்ள நிலையில், ஆட்குறைப்பிலும் ஈடுபட்டுள்ளது. அதன்படி தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புக் குழுக்களைச் சேர்ந்த 600 ஊழியர்களை முதற்கட்டமாக வேலை நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும் விற்பனைக் குழுவில் 250 நிர்வாகிகளை புதிதாக பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இது குறித்து முன்னதாக ஓயோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செலவு குறைப்பு நடவடிக்கையாக ஓயோ அதன் தயாரிப்பு, பொறியியல், கார்ப்பரேட் தலைமையகம், ஓயோ வகேஷன் ஹோம் குழு ஆகியவற்றில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுமார் 3700 பணியாளர்கள் கொண்ட எங்கள் தளத்தில் 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய உள்ளோம்.
அதன்படி தற்சமயம் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்து உறுப்பினர்களை புதிதாக பணியமர்த்த உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.