England Economic Crisis: கடும் விலைவாசி உயர்வு.. கடைகளில் திருடும் மக்கள்..! பரிதாப நிலையில் இங்கிலாந்து..!
இங்கிலாந்தின் சூப்பர் மார்க்கெட் கடைகளில் திருட்டு 22 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டு 7.9 மில்லியன் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இங்கிலாந்து கடும் கடுமையான பொருளாதார சிக்களுக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள மக்கள் விலையேற்றதால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாழ்வாதார செலவுகள் எல்லைமீறி சென்றுள்ள நிலையில் அங்கு வாழும் பலர் குடும்பத்தை நடத்தவே சிரமப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
அதிகரிக்கும் திருட்டு:
கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகான 2021 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையே UK முழுவதும் அடிப்படை வாழ்க்கைக்கான செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வாழும் மக்களில் சிலர் தங்கள் அன்றாட தேவைக்கான பொருளை கடைகளில் இருந்து திருட வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். தி மெட்ரோ எடுத்த ஆய்வின் படி, 10 இளைஞர்களில் ஒருவர் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க சூப்பர் மார்க்கெட்டின் செல்ஃப்-செக் அவுட்களில் இருந்து பொருட்களைத் திருடுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
செல்ஃப்-செக் அவுட் கலாச்சாரம்
"செல்ஃப்-செக்அவுட் என்ற ஒரு கலாச்சாரம் இங்குள்ள சூப்பர் மார்கெட்களில் உள்ளன. ஆட்கள் யாருமின்றி நாமே பொருட்களை எடுத்து, நாமே நமது கார்டு மூலம் கட்டணம் செலுத்திக்கொள்வது போன்ற வசதி அது. ஆனால் அங்கு பொருட்களை எடுக்கும் நபர்கள் சிலர் பணத்தை செலுத்தாமல் வெளியே எடுத்து சென்றுவிடுகிறார்கள்.
அப்படி செல்லும்போது அலாரம் அடிக்கும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாங்கள் சென்று பிடிப்போம். திரும்ப திரும்ப குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்கிறோம். ஒரு நாளிலேயே இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெறுகின்றன," என்று பகுதி நேரமாக அங்குள்ள சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் பெயர் கூற விரும்பாத தமிழர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொரு்களின் விலையுயர்வு
அந்த நாட்டில் பணவீக்கம் பல மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 10.4% ஆக உள்ளது. உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் உச்சத்தில் உள்ளன. குழந்தைகளுக்கான மருந்து, கால்பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இங்கிலாந்தில் அடிக்கடி திருடப்படும் பொருட்களில் ஒன்றாகும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பால் மற்றும் சீஸ் போன்ற குறிப்பிட்ட பொருட்கள் பாதுகாப்பு டேக் உடன் வரவேண்டிய கட்டயதிற்குள்ளாகி இருக்கிறது.
தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) கொடுத்த சமீபத்திய தரவுகளின்படி, "உணவு மற்றும் மது அல்லாத பானங்களின் விலை 19.1% உயர்ந்துள்ள நிலையில் அதிக விலைச் சுமையின் கீழ் பல குடும்பங்கள் போராடி வருகின்றன; சில பொருட்கள் ஓராண்டில் இரட்டிப்பாக விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட உணவுகள் கடந்த ஆண்டில் 25% உயர்ந்துள்ளன," என்று கூறபபடுகின்றது.
திருட்டு 22 சதவீதம் உயர்வு
இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கான தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை செப்டம்பர் வரையில், கடைகளில் திருட்டு 22 சதவீதம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியம் புள்ளிவிவரங்களும் இதையே தெரிவிக்கின்றன, கடந்த ஆண்டு 7.9 மில்லியன் வழக்குகள் இது குறித்து பதியப்பட்டுள்ளன. இது 2016/17 ஐ விட ஐந்து மில்லியன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சில்லறை ஆராய்ச்சி மையத்தின் 2022 ஆய்வில், '2021-22 ஆம் ஆண்டில் நடந்த கடைத் திருட்டு சம்பவங்களால் பிரிட்டிஷ் பொருளாதாரத்திற்கு 660 மில்லியன் பவுண்டுகள் செலவாகும்' என்று கண்டறியப்பட்டது.