உலகின் முதல் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசி! - சுகாதார நிறுவனப் பட்டியலில் இடம்பெற்றது
அதிக அளவிலான முதியவர்களில் இந்த மருந்து விரைந்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணியை உலகநாடுகள் அனைத்தும் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 0.35 சதவிகிதம் பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதற்கிடையே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியை அவசரகால உபயோகத்துக்கான தடுப்பூசிகள் பட்டியலில் உலக சுகாதார மையம் தற்போது இணைத்துள்ளது. சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இதுவரையில் இடம்பெற்றிருந்த தடுப்பூசிகள் அனைத்துமே இரண்டு கட்டங்களாகச் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அதன் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே கட்டமாகச் செலுத்தப்படும் தடுப்பூசி இது மட்டுமே.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியோசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனாவுக்கு எதிரான ஒவ்வொரு புதிய, பாதுகாப்பான, நம்பகத்தன்மை மிக்க மருந்தும் சர்வதேசத் தொற்றுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நம்மை ஒருபடி முன் நகர்த்திச் செல்கிறது. ஆனால் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்தத் தடுப்பூசி சென்று சேர்ந்தால் மட்டுமே இந்த மருந்துகள் தரும் நம்பிக்கை நமக்குப் பயனுள்ளவையாக இருக்கும். மருந்துகளைத் தயாரிக்கும் ஒவ்வொரு நாடுகளும் இதற்கான முன் திட்டமிடலுடன் தடுப்பூசி தயாரிப்புகளை அணுக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தங்களது தடுப்பூசி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தடுப்பூசிகளைச் செலுத்தி ஆய்வுசெய்து பெறப்பட்ட தரவுகளின்படி அதிக அளவிலான முதியவர்களில் இந்த மருந்து விரைந்து செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோ-என்-டெக் நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பில் உருவான கொரோனா தடுப்பூசி மற்றும் அஸ்ட்ராசெனிக்காவின் தடுப்பூசியை அடுத்து உலக சுகாதார நிறுவனம் ஆதரிக்கும் மூன்றாவது தடுப்பூசி ஜான்சன் அண்ட் ஜான்சன் என்பது குறிப்பிடத்தக்கது.