விழுப்புரம் மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்களில் வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு: காரணம் என்ன?
விழுப்புரம்: மரக்காணம் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாரத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் வேளாண் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் விவசாயிகள் நெல்நாற்று விடும் பணிகளைமுழு வீச்சில் துவங்கியுள்ளனர். மானாவரி பகுதிகளில் உளுந்து, பச்சை பயிறு, பணிப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களையும் எதிர்வரும் கார்த்திகைப்பட்டதில் மணிலா, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களையும் தர்பூசணி போன்ற பழவகை பயிர்களையும் பயிரிட தங்களது நிலத்தினை தயார் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் குறை தீர்ப்பு நாள்
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் திரு பழனி வர்களது ஆணையினைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தரமானதாகவும் சரியான விலையிலும் கிடைப்பதை உறுதி செய்திடும் பொருட்டு மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் மரக்காணம் வட்டாரத்தில் உள்ள தனியார் இடுப்பொருள் விற்பனை நிலையங்களை திடீர் ஆய்வு செய்தனர். இதில் உரங்கள் இருப்பு குறித்தும் பாயிண்ட் ஆப் சேல் மெஷின் மூலம் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தனர். குறிப்பாக தர்பூசணி பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், குரோத் ரெகுலேட்டர் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் குறித்து ஆய்வு செய்து ஜி2 படிவம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
மேலும் தரமான பொருட்களை அதற்கான நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இடு பொருட்களை வழங்கும் போது கண்டிப்பாக பட்டியலிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதேபோன்று உரிமத்தில் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். ஆய்வின் போது வேளாண்மை அலுவலர் தேவி, துணை வேளாண்மை அலுவலர் கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது அங்கு கூடியிருந்த விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை குறைந்தால் மேற்கொள்ள வேண்டிய மாற்றுப் பயிர் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது..