கோயில் கடைகள் ஏலத்தில் அரசியல் தலையீடு: அழுது கொண்டே வெளியேறி பெண் அதிகாரி!
வேட்டவலம் கோயில் மற்றும் கடைகள் ஏலம் விடும் நிகழ்ச்சியில் பெண் அதிகாரி அழுது கொண்டே வெளியேறிதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தில் விழுப்புரம் செல்லும் சாலையில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. அகத்தியர் வழிபட்ட தலம் என்பதால் அகஸ்தீஸ்வரர் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு சொந்தமான இடம் வேட்டவலம் பஜாரில் உள்ளது. இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 24 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கான ஏலம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினர் கலந்து கொண்டனர். 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட கடைக்கு ஆரம்ப ஏலத்தொகையே ரூ.3 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. மாத வாடகை அதிகமாக இருப்பதால் பொது ஏலத்தில் யாரும் டெண்டர் கேட்கவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் 1 எண் கடைக்கு 11 ஆயிரத்து 100 ரூபாய், 2 எண் கடைக்கு 10ஆயிரத்து 100 ரூபாய், 5 எண் கடைக்கு 3ஆயிரத்து 600 ரூபாய் என வாடகையை குறிப்பிட்டு பெட்டியில் டெண்டர் படிவம் போடப்பட்டதாகவும், கூறப்படுகிறது. இதற்காகன தொகை (டேவணித் தொகை) வங்கிகள் வேலை நிறுத்தம் என்பதால் வரைவோலை (டி.டி) எடுக்க முடியாமல் ரொக்கமாக தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வேறு யாரும் டெண்டர் கேட்டு பெட்டியில் படிவத்தை போடவில்லை.
எனவே 3 நபர்கள் மட்டுமே டெண்டர் கேட்டிருந்த நிலையில் கடைகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேட்டவலம் அ.தி.மு.க நகர செயலாளர் செல்வமணி, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உமாவிடம், வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் மனம் உடைந்த செயல் அலுவலர் உமா, அழுதப்படி, கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்த படி கோயிலில் இருந்து வெளியேறினார்.
இது சம்மந்தமான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அலுவலர் உமா அழுது கொண்டு சென்றது குறித்து அ.தி.மு.க நகர செயலாளர் செல்வமணியிடம் பேசியபோது இந்த டெண்டரை நடத்தியது மேல்மருவத்தூர் கோயில் நிர்வாகத்தினர். அந்த அலுவலரின் அனுமதியோடுதான் டேவணித் தொகையை , நான் செயல் அலுவலர் உமாவிடம் ரொக்கமாக கொடுத்தேன் .
ஆனால் பணத்தை நான் வாங்கவில்லை என அவர் சத்தியம் செய்கிறார். இதற்கு காரணம் தி.மு.கவினர் கொடுத்த அழுத்தத்தால் தான் அவர் டெண்டரை ரத்து செய்வதாக கூறினார். தி.மு.கவினர் மிரட்டியதால் தான் அவர் அழுதார். அவரது செல்போனை வாங்கி பார்த்தாலே ஆதாரம் கிடைக்கும் என்று கூறினார். இது குறித்து திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசுகையில் அதிகாரிகள் விதிகளுக்கு உட்பட்டுதான் ஏலத்தை ரத்து செய்துள்ளனர்.
இதில் எங்களுடைய தலையீடு ஏதும் இல்லை என தி.மு.கவினர் தெரிவித்தனர். இந்நிலையில் தன்னை பணி செய்யவிடாமல் செல்வமணி மிரட்டல் விடுத்ததாக செயல் அலுவலர் உமா, வேட்டவலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதே போல் செல்வமணி தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் வேட்டவலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.