“மனைவி எச்சரித்தும் திருமணத்தை மீறிய உறவை கைவிட முடியவில்லை” - காதலி கொலை; காதலன் கைது!
அணைக்கட்டு அருகே பெண் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலை வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் வயது ( 30) இவருடைய மனைவி மலர் வயது (25). குமார் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்த நிலையில் மலர் கடந்த 17-ந் தேதி அணைக்கட்டு தாலுகா அலுவலகத்திற்கு சென்று வருவதாக அவரது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். அவர் அல்லேரி மலைப்பாதையில் உள்ள ஒரு புதரில் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் அணைக்கட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த அணைக்கட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் தலையில் கல்லைப்போட்டு கொன்று இருப்பார்கள் என்றும், காவல்துறையினர் கருதினர்.
அதனைத்தொடர்ந்து கொலைசெய்யப்பட்ட மலரின் உறவினர்கள் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதேப் பகுதியைச் சேர்ந்த 3 நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரது மகனான கூலித்தொழிலாளி சண்முகம் வயது (30) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மலரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பின்னர் சண்முகம் கூறுகையில் ”மலரின் கணவர் குமார் இறந்த பிறகு மலரும் நானும் உறவில் இருந்தோம். இந்த உறவு என்னுடைய மனைவி அம்சாவுக்கு தெரிந்தது. பிறகு என்னுடைய மனைவி அம்சா என்னிடம் தகராறில் ஈடுப்பட்டார். அதன் பிறகு அந்த உறவை நான் துண்டித்து விட்டேன். கொலை நடைப்பெற்ற சம்பவத்தன்று மலர் தனியாக அணைக்கட்டு செல்வதை அறிந்த நான், அவருக்கு தொலைபேசியில் அழைத்தேன். இருவரும் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதன் பிறகு அவரை நான் மலைப்பாதையில் சந்தித்தேன்.
அப்போது மலர் என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நான் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து மலரின் தலை மீது ஓங்கி அடித்தேன். இதில் மலர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே உடலை ஒரு புதரின் ஓரமாக தள்ளிவிட்டு நான் சென்று விட்டேன்” இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வாக்கு மூலத்தின் அடிப்படையில் சண்முகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். சண்முகத்திற்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர்.
உங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்