(Source: ECI/ABP News/ABP Majha)
ஸ்பீட் போஸ்ட்டில் வாங்கலாம் மொறு மொறு கடலை மிட்டாய்: எப்படி?
கரிசல் மண் பூமியான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு.
கோவில்பட்டி கடலை மிட்டாயை அஞ்சல்துறை மூலம் பணம் செலுத்தி வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஒட்டப்பிடாரம் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. கரிசல் மண் பூமியான கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் நிலக்கடலைகளுக்கு தனி மவுசு உண்டு. தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயார் செய்யும் பக்குவத்தைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கிவிடுகிறது. வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து, சரி பாதியாக வரும் வரை காய்ச்சி பாகு தயார் செய்து கொள்கிறார்கள். அதாவது, 10 கிலோ மண்டை வெல்லத்தில் 7 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி பாகு தயாரிக்கிறார்கள். காய்ச்சியதும் அதில் படியும் மண்டியை அப்புறப்படுத்திவிட்டு தெளிந்த பாகுவை கடலை மிட்டாய் தயாரிக்க பத்திரப்படுத்துகிறார்கள். மறுநாள் அந்த வெல்லப்பாகுவை மீண்டும் வாணலியில் போட்டு காய்ச்சுகிறார்கள். அடி பிடித்துவிடாமல் இருக்க கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொன்னிறமாக மாறும் பதத்திற்கு வெல்லப்பாகு சற்று நேரத்தில் வருகிறது.
பின்னர், உடைத்து வைக்கப்பட்ட நிலக்கடலை பருப்பை அதில் போடுகிறார்கள். வாணலியில் வெல்லப்பாகுவை 2 லிட்டர் ஊற்றிருந்தால் 2 கிலோ அளவுக்கு நிலக்கடலை பருப்பு போடுகிறார்கள். பின்னர் கிளறிவிட்டு புரோட்டா மாவு போன்று மொத்தமாக கடலை பருப்பு - வெல்லப்பாகு கலவையை உருட்டி பெரிய உருண்டையாக எடுக்கிறார்கள்.அதனை ஒரு மரப்பலகை தட்டில் வைத்து சப்பாத்தி உருட்டும் கட்டையைக் கொண்டு, இரும்பினால் செய்யப்பட்ட உருளையால் உருட்டி பரப்புகிறார்கள்.மரத்தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக கிழங்கு மாவை ஏற்கெனவே அதில் தடவி வைக்கிறார்கள். அதில் 5 நிமிடங்களில் வெல்லப்பாகு, கடலை பருப்பு சேர்ந்து அந்த தட்டில் உறைந்து கடலை மிட்டாய் ஆகிவிடுகிறது.
இயற்கையில் இனிப்பு சுவை கொண்ட இந்த நிலக்கடலையை கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு உலகம் முழுவதிலும் வரவேற்பு உண்டு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலகளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல் துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது.
தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்பனையையும் அஞ்சல் துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகம் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலிலேயே தபால்காரர் மூலம் கொண்டு சேர்க்கப்பட உள்ளது. இந்தியாவின் எந்த அஞ்சலகத்திலும் ரூ.390 கொடுத்து கடலை மிட்டாய்க்கான ஆர்டர் செய்தால் அது கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்டு அடுத்த ஓரிரு நாட்களில் அவர்கள் வீட்டிற்கே விரைவு அஞ்சல் மூலம் கொண்டு சேர்க்கப்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.விரைவு அஞ்சலுக்கென தனி கட்டணம் கிடையாது. ரூ.390 செலுத்தி விரைவு தபால் மூலம் பெறப்படும் பார்சலில் மொத்தம் ஒரு கிலோ எடை கொண்ட 5 கடலை மிட்டாய் பாக்கெட்டு கள் இருக்கும். மேலும் வீட்டில் இருந்தபடியே தபால்காரர் மூலமாகவும் ரூ.390 செலுத்தி கடலை மிட்டாயை ஆர்டர் செய்து கொள்ளலாம் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி முதுநிலை அஞ்சல் கண்காணிப்பு அலுவலர் சிவப்பிரகாசம் கூறுகையில், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல, இந்திய அஞ்சல் துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டது. தற்போது கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல்துறை மூலம் அனைத்து அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி அஞ்சலகங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் தபால்காரர் மூலம் சேர்க்கப்பட உள்ளது என்றார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )