Unnao Case: "பொண்ணு கல்யாணத்துக்கு போகணும் அய்யா!.." - உன்னாவ் வன்கொடுமை வழக்கு.. ஜாமின் கேட்கும் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ
உன்னாவ் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கார், மகளின் திருமணத்திற்காக ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தை சேர்ந்த 17 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொடர்ந்து அவரை கொலை செய்யும் முயற்சியும் அரங்கேறியது. தேசிய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில், அம்மாநில சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான குல்தீப் சிங் செங்கர் முக்கிய குற்றவாளியாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணமடைந்த மற்றொரு வழக்கில், 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
ஜாமின் கோரி மனு:
இந்நிலையில், குல்தீப் சிங் செங்கார், தனது மகளின் திருமணத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், பிப்ரவரி 8, 2023-ல் தனது மகளின் திருமணம் நடைபெற உள்ளதாகவும், வரும் ஜனவரி மாதமே திருமண சடங்குகள் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் குல்தீப் சிங் செங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
விசாரணை ஒத்திவைப்பு:
இந்த மனு நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தங்களில் ஒருவரான தல்வந்த் சிங் முன்னிலையில் விசாரணைக்கு பட்டியலிடவும், வியாழக்கிழமை ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
உன்னாவ் விபத்து வழக்கு:
முன்னதாக, லக்னோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானார். இந்த கோர விபத்தில், உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இருப்பினும், வழக்கில் தொடர்புடைய இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். இந்த விபத்து பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்வதற்கு நடந்தப்பட்ட சதி செயல் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்ததது.
இந்த விபத்து சம்பத்துவத்துக்குப் பிறகு, உயிர் பிழைத்த இளம்பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், பாலியல் வன்முறை உள்ளிட்ட 5 வழக்குகளையும் லக்னோ நீதிமன்றத்தில் இருந்து டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவில், குல்தீப் சிங் செங்கரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், அவருக்கு அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனை விதித்தது. அப்பெண்ணின் தந்தை மரணமடைந்த மற்றொரு வழக்கில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.