கொரோனா பொது முடக்கத்திற்கு பின்னர் களைகட்டியுள்ள ஆயுதபூஜை பண்டிகை
பூஜை பொருட்களை வாங்குவதற்காக கரூர் சந்தை வீதிகளில் மக்கள் குவிந்தனர்
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையையொட்டி சிறிய கடைகள் முதல் அனைத்து வகையான பெரும் தொழிற்சாலைகள் வரை ஆயுத பூஜை உற்சாகமாகக் கொண்டாடப்படுவதையொட்டி கரூரில் பூஜை பொருள்கள் விற்பனை களை கட்டியது.
காமராஜ் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை, பொரி, கடலை, கொய்யா பழம், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள், சிறிய வாழை மரங்கள் ஆகியவை குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
வாழை மரங்கள் ரூ.50 முதல் ரூ.100 வரையும், வாழை இலை 10 இலைகள் கொண்ட அடுக்கு ரூ.50 வரையிலும் விற்கப்பட்டது. மேலும், கொய்யாப்பழம் கிலோ ரூ.80-க்கும், ஆப்பிள் கிலோ ரூ.150-க்கும், ஆரஞ்சு ரூ. 80க்கும், பூசணி ஒன்று ரூ.50 முதல் ரூ. 100 வரை விற்கப்பட்டது. காமராஜ் தினசரி மார்க்கெட், பேருந்து நிலைய காய்கறி சந்தை, உழவர் சந்தை பகுதிகளில் உள்ள சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது.
பல்வேறு பகுதிகளில் தற்காலிக கடைகள் உருவாக்கப்பட்டு வாழை மரம் மற்றும் பழங்கள் விற்கப்பட்டன. ஆயுத பூஜை ஒட்டி காமராஜர் சாலையில் பூஜை பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் சிறுது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், ஆயுத பூஜை தினத்தன்று சரஸ்வதி பூஜையும் நடைபெறுவதால் சரஸ்வதி சுவாமி படங்கள் ரூ.250 தொடங்கி ரூ.3000 வரை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
ஆயுத பூஜையையொட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள பூ சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக விலை கணிசமாக உயா்ந்திருந்தது. இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2000, அரளி கிலோ ரூ.600, முல்லைப்பூ கிலோ ரூ.1000-க்கும் விற்பனையாது. மேலும் சம்பங்கி கிலோ ரூ. 250-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும் விற்பனையானது. சந்தையில் மலா் மாலைகள் ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கப்பட்டன. கதம்ப மாலைகளும் ரூ.50 முதல் விற்கப்பட்டன. பூக்கள் வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்ததால் பூச்சந்தையில் கூட்டம் திரளாகக் காணப்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோவில்கள் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் பூக்களின் விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் இருசக்கர பழுது பார்க்கும் கடை, டீக்கடை, பேக்கரி சலூன் கடை, அச்சகம், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து நிலையங்களில் இன்று மாலை முதல் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் போடப்பட்டு வாழை மரம் கட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற உள்ளது.