திருச்சியில் இடியாப்ப வியாபாரி கொலை வழக்கில் மனைவி கைது
துவரங்குறிச்சி அருகே வியாபாரி கொலை வழக்கில் மனைவி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது 40). இடியாப்ப வியாபாரியான இவர் கடந்த 28-ந் தேதி துவரங்குறிச்சி - மதுரை சர்வீஸ் சாலையில் தலையின் பின் பகுதியில் பலத்த காயங்களுடன் கிடந்தார். இதை கண்ட அப்பகுதியிர் அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விபத்து நிகழ்ந்து ராமர் காயம் அடைந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராமர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமரிடம் வேலை பார்த்த அக்கியம்பட்டியை சேர்ந்த அருள்குமார் (20) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமரை கொலை செய்தது உறுதியானது. இதற்கிடையில் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்திட வலியுறுத்தி வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் போலீசாரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் அருள்குமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, ராமரின் மனைவி கண்மணி (35) என்பருடன் அருள்குமார் நீண்ட நேரம் பேசி இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கொலையில் கண்மணிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக கைதான அருள்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கண்மணியை அவரது கணவர் ராமர் அடித்து துன்புறுத்தி வந்தார். இதுதொடர்பாக கண்மணி என்னிடம் கூறினார். இதுபற்றி அருள்குமாரிடம் கேட்ட போது என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நான் கையில் வைத்திருந்த கம்பியை எடுத்து ராமர் தலையில் தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டேன். பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதனையடுத்து போலீசார் என்னை கைது செய்தனர் என்று கூறி உள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்