திருச்சியில் இரவு முழுவதும் தொடர் மின்வெட்டு; பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதிலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கடந்த 2 மாதங்களாக வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் முன் அறிவிப்பு இல்லாமல் மின்வெட்டு செய்தல், அறிவித்த நேரத்தை விட அதிகமாக நேரங்களில் மின்வெட்டு செய்தல் என்பது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இதுக்குறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்ச்சாட்டியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பல பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி முதல் இன்று காலை வரை மின் விநியோகம் இல்லை. ஒரே நாளில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் விநியோகம் இல்லை. மின்வெட்டு குறித்து பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று காலை வரை மின்சாரம் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர்- திருச்சி பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமாதானம் ஏற்படவில்லை. பொதுமக்களும், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோடைகாலத்தில், இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டதால், பெரும் சிரமத்திற்கு ஆளாகினோம். இதுகுறித்து புகார் தெரிவிக்க மின்வாரிய அலுவலர்களை தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. மேலும் மின் தடை காரணமாக காலை குடிநீர் விநியோகமும் நடைபெறவில்லை என்று தெரிவித்தனர். பொதுமக்கள் மறியல் காரணமாக திருச்சி-துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உயர் அழுத்த மின் வழி பாதையில் உள்ள முக்கிய மின் சாதனம் பழுதானதால் மின்தடை ஏற்பட்டதாகவும், சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள், இரவு முழுவதும் ஈடுபட்டாகவும், மின்வாரிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்