வகுப்பில் வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்து இறந்த 2ம் வகுப்பு மாணவன் - திருச்சியில் சோகம்
திருச்சியில் பள்ளி வகுப்பறையில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு துடிதுடித்து கீழே விழுந்து இறந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாநகர் கண்ட்டோன்மென்ட் பாரதியார் சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன், வகுப்பறையில் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார், பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடந்த புதன்கிழமை மதியம், 2.48 மணி அளவில் சிறு இடைவெளியின் போது, பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் வெளியே விளையாடிவிட்டு மிகுந்த சோர்வுடன் அவனது இருக்கையில் வந்து அமர்ந்து உள்ளான். அப்போது திடீரென அந்த மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்டு, மயக்கம் வந்து கீழே விழுந்து உள்ளார்.
இருப்பினும், அதை கவனிக்காத மற்ற மாணவர்கள், அடுத்த வகுப்பு தொடங்கியபோது, மாணவன் கீழே கிடந்ததை பார்த்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
அதைடுத்து, அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகத்தினர் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பள்ளி இடைவேளையாக இருந்ததால் சக மாணவர்கள் விளையாடி கொண்டிருந்தால் இம்மாணவனை கவனிக்காமலேயே இருந்துள்ளனர்.வலிப்பு வந்த உடனே, உடனடியாக கவனித்து மாணவனுக்கு மருத்துவ உதவி வழங்கி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பது தான் பெற்றோர்களின் வேதனையாக உள்ளது.
அந்த மாணவருக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை இருந்துள்ளது. அதுதொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
பள்ளி வகுப்பறையில் வலிப்பு நோய் ஏற்பட்டு, இரண்டாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.