திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பாலியல் புகார்: மேலும் 3 பேர் சிக்கினர்!
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் துறைத்தலைவர் பால்சந்திரமோகன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப்ஹீபர் கல்லுாரி மாவட்டத்திலே சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும். இந்த கல்லூரியில் சுமார் 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் சி.எஸ்.ஐ. தென்னிந்திய திருச்சபையின் தமிழ்த்துறையில் பட்டமேற்படிப்பு படித்த மாணவிகள் 5 பேர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மீது கடந்த மார்ச் மாதம் பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க புகார் மனுவை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பினர்.
கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கல்லூரி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மாணவிகளிடம் இருந்து வந்த காரணத்தால் அவர் மீதான குற்றச்சாட்டை மாவட்ட சமூகநலத்துறையின் பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு தானாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பின்கீழ் 6 பேர் கொண்ட குழு, பால் சந்திரமோகன் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தொலைபேசி மூலமாக மாவட்ட சமூக நல பெண்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நேற்று இரவு முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டது. அப்போது இந்த பாலியல் குற்றச்சாட்டில் மேலும் மூன்று பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேலும், மாணவிகளிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாகவே பேசுவார் என்று தெரியவந்துள்ளது. இந்த விசாரணை பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்பதால் மாணவிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாணவிகளுக்கு விசாரணைக்குழு அதிகாரிகள் நம்பிக்கை அளித்தனர்.
முன்னதாக, மாணவிகள் அளித்த புகாரில் துறைத்தலைவர் பால் சந்திரமோகன் வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது, சட்டையை தளர்த்திக் கொண்டு ஆபாச செயல்களில் ஈடுபடுவது, வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால்,தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப்படுத்துவது, துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர்,HOD யை பார்க்க போகும் போது, முகம் கழுவி மேக்கப் போட்டுக் கொண்டு தான் போக வேண்டும் என கட்டாயப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தது. இதனால், கல்லுாரியிலிருந்து வெளியேற விரும்புவதாக மாணவிகள் தங்களது புகார் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான 7 பேர் கொண்ட விசாரணை குழு, விசாரணை நடத்தி தங்களது விசாரணை அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் பால் சந்திரமோகன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.