என்கவுண்டர் இல்லை; தற்காப்பிற்காக சுடப்பட்டது - திருச்சி எஸ்.பி. வருண்குமார் விளக்கம்
காவல்துறையினர் தங்களுடைய தற்காப்பிற்காக ரவுடி கொம்பன் ஜெகனை சுட்டனர். - திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமார்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கூலிப்படையாக செயல்பட்டது. அடிதடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மே 19ஆம் தேதி ஜெகன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அவரது வீட்டில் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டனர். அந்த ஒன்பது பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஜெகன் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் காயமடைந்தார். மேலும் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக போலீசார் ஜெகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஜெகன் உயிரிழந்தார். இது குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பேசியது..
"கடந்த சில நாட்களாகவே துப்பாக்கி மற்றும் அறிவாளால் பன்றிகளை தாக்கி கடத்தி வருகின்றனர் என புகார்கள் வந்துள்ளது. மேலும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும், ரவுடி கொம்பன் ஜெகன் அங்குள்ள சனமங்கலம் வனபகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் , அவரை பிடிக்க சென்றார். அப்போது வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் வெடிகுண்டு வைத்து ரவுடி ஜெகன், காவல் உதவி ஆய்வாளரின் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். மேலும் இடது கையில் வெட்டி உள்ளார். இதனால் தற்காப்பிற்காக காவல் உதவி ஆய்வாளர் இரண்டு முறை சுட்டு உள்ளார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக லால்குடி அரசு மருத்துவமனைக்கு ரவுடி ஜெகனை கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும், உடல்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் காயம் பட்ட உதவி காவல் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது வந்து என்கவுண்டர் இல்லை. காவல்துறையின் தற்காப்பிற்காக, பாதுகாப்பிற்காக சுடப்பட்டது. சனமங்கலம் பகுதியில் வழிப்பறி நடைபெறுவதாக தகவல் வந்ததை எடுத்து அங்கு சென்றபோது இந்த துப்பாக்கி சூடு நடந்தது.
மேலும் உடனே ஜெகனை மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்ற பின்னர், ஆய்வாளர் சம்பவ இடத்தில் பார்த்த போது தான் நாட்டு துப்பாக்கி பெட்ரோல் வெடிகுண்டு, சணல் வெடிகுண்டு இருப்பதை கண்டறிந்தனர். வளர்ந்து வரும் ரவுடிகளுக்கு கேங் லீடராக செயல்பட்டுள்ளார் கொம்பன் ஜெகன். குறிப்பாக ராமஜெயம் கொலைக்கும், இதற்கும் சம்பந்தமில்லை" என்றார்.
"இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிபதி விசாரணைக்கு அனுப்பப் போகிறோம். ஜெகன் பல இடங்களில் வழிப்பறி அடிதடி, கொலை வழக்குகளில் சம்பந்தம் பட்டவர். இவர் மீது 53 வழக்குகள் உள்ளது, திருச்சியில் 8 வழக்குகள், தமிழகம் முழுவதும் பல வழக்குகள் உள்ளது. பல ரவுடிகள் கேங் லீடருடன் சேர்ந்து பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். சிறையில் இருக்கும் போதெல்லாம் பல ரவுடிகளிடம் தொடர்பு கொண்டு பல குற்றங்களுக்கு திட்டம் தீட்டி உள்ளார். பல முக்கியஸ்தர்களை மிரட்டக்கூடிய வாய்ப்பு இருக்கலாம், ஆனால் அதுபோல புகார்கள் இதுவரை வரவில்லை. ஆனால் இதுபோன்று செயல்படக்கூடிய கேங்லீடர் தான் இவர். கொம்பன் ஜெகன் ஏ ப்ளஸ் கேட்டகரியை சேர்ந்தவன். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக இவரது கூட்டாளிகள் 20 பேரை கைது செய்துள்ளோம் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் என்கவுண்டர் என்பது இல்லை தற்காப்பிற்காக சுடப்பட்டது. குண்டாஸின் சட்டத்திற்கு வலிமை இருக்கு, வலிமை இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கே சென்றவர்களுக்கு துப்பாக்கி வைத்திருப்பார் என்று தெரியவில்லை. அதன் பிறகு சிறுகனூர் ஆய்வாளர் சென்று பார்த்த போது தான் துப்பாக்கி இருப்பது தெரிய வந்தது. ஆகையால் இனிமேல் தான் அதை விசாரணை செய்ய வேண்டும் தற்போது விசாரணை அதிகாரியாக லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் நியமித்து உள்ளோம்" என்றார்.