அஜித்குமாரிடம் அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் ஆவேசம்
மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத்
திருச்சியில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் கல்வி, வேலை, தொழில், புதிய திட்டங்கள், மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் உள்ளிட்டவற்றுக்கு நிதி இல்லை. ஆனால் மறைந்த கலைஞர் பேனா சிலை வைக்க நிதி உள்ளதா? திராவிட கொள்கைகள் ,திராவிட மாடலை மக்கள் மத்தியில் புகுத்தும் நோக்கத்தோடு அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து சிலைகளை வைத்து வருகிறார்கள். இதை முற்றிலுமாக இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.
உடனடியாக பேராசிரியர் அன்பழகன், கலைஞர் கருணாநிதி, ஈவேரா சிலைகளை உடனடியாக அரசு இடங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும். மேலும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மட்டும் அவர் கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மணிப்பூர் கலவரத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் இந்து கடவுளான ராமர், சீதை லட்சுமணன், மற்றும் பாரத மாதா அவர்களை இழிவுபடுத்தும் விதமாக புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா விடம் இருந்து சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “திமுக நீட் தேர்வை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, நாடகம். நீட் அரசியலை கையில் எடுத்துள்ள உதயநிதியை வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் உதயநிதி போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அண்ணாமலை பாதயாத்திரை இருக்கிறது. ஆனால், உதயநிதியோ மாணவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறார். திமுக அரசுக்கு எதிராக பேசிய நரிக்குறவப் பெண் அஷ்வினி பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் நடிகர் அஜித் என்றால் யார் என்று தெரியாது எனக் கூறியது வியப்பளிக்கிறது. நடிகர் அஜித் இந்திய ராணுவத்துடன் சேர்ந்து ட்ரோன்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட உள்ளார். இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சாதனைகள் புரிந்து வருகிறார். கடந்த காலத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற மேடை விழாவில் திரைப்பட கலைஞர்களை மிரட்டி விழாக்களுக்கு அழைக்கக்கூடாது என பொது மேடையில் பேசியது அனைவரையும் வியப்பிக்க வைத்தது. அப்போதிலிருந்தே திமுகவினர்களுக்கு அஜித்தை பிடிக்காமல் போய்விட்டது. நடிகர் அஜித் தைரியமாக பேசிய அந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டது.
தற்பொழுது நடிகர் அஜித்குமார் மீது திமுக மூத்த தலைவர் துரைமுருகன் அவதூறாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர், உடனடியாக அஜித்குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவினர் அஜித் குமார் மீது வன்மத்துடன் உள்ளனர். மேலும் சந்துரு, ஜாதி கலவரத்தை தூண்டுபவர். நக்சல் அமைப்புகளுடன் தொடர்புடையவர். அவரை போய் நாங்குநேரி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் குறித்த குழுவை தமிழக அரசு அமைந்துள்ளது. இவர்கள் அமைத்த பொருளாதார ஆலோசனைக் குழு என்ன ஆனது? அவர்கள் என்ன ஆலோசனை கொடுத்துள்ளனர். திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தவிருக்கும் "வள்ளலார் 200 வைக்கம் 100" என்ற விழாவை தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். வள்ளலார், நாத்திகம் பேசினார் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிரூபித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.