சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது
சட்டத்திற்கு புறம்பாகவும் மக்களை அச்சுறுத்து விதமாகவும் செயல்படும் நபர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் - போலீஸ் கமிஷனர் காமினி
திருச்சி மாநகர காவல் துறை ஆணையராக காமினி பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக வாரம் தோறும் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். மேலும் மாநகர் பகுதிகளில் திருட்டு,கொலை, கொள்ளை சம்பவங்களை முற்றிலும் தடுத்திட 24 மணி நேரமும் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக மாநகர் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும், சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் உடனடியாக அழைத்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டு உள்ளார். குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குக்கா, கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமல்லாமல் கடைகளை மூடி சீல் வைக்கும் நடவடிக்கைளை எடுத்து வருகிறார். பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களை வைத்து மிரட்டும் நபர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருச்சி மாநகரில் பொதுமக்களிடையே அச்சத்தையும், வன்முறையை தூண்டு விதமாக நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி ,பயங்கர ஆயுதங்களை பயன்படுத்துபவர்களை உடனடியாக அழைத்து விசாரணை செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எடுத்து வருகிறார்கள். அதன்படி, கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு உள்ள தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்றும், அங்கு சட்டத்திற்கு விரோதமாக பழைய ஏர் பிஸ்டல் ஒன்றும், அதற்கு பயன்படுத்த கூடிய ஈய தோட்டாக்கள், வீச்சு அருவாள்-1, பெரிய பட்டா கத்தி-1 போன்ற அபாயகரமாக ஆயுதங்களை வைத்திருந்த குமரன் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது வயது 34, த.பெ.அப்துல் ரஹீம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.
மேலும் விசாரணையில் அப்துல் ஹமீது என்பவர் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபருடனும், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஜியாவுதீன் வயது 38, த.பெ.அப்துல் நாசர் என்பவருடனும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவருகிறது. தொடர் விசாரணையில் ஜியாவுதீன் என்பவரிடமிருந்து ஒரு ஏர்பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளான அப்துல் ஹமீது மற்றும் ஜியாவுதீன் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும், ஆயுதங்களை கைப்பற்றியும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
சட்டத்திற்கு புறம்பாகவும் மக்களை அச்சுறுத்து விதமாகவும் செயல்படும் நபர்களை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து திருட்டு கொள்ளை,கொலை, சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு துணை இருப்பவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.