’திருச்சியில் திறக்கப்பட்ட 746 பள்ளிகள்’-ஆன்லைன் க்ளாசினால் அவதிப்பட்டதாக கூறும் மாணவர்கள்...!
’’ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சக நண்பர்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது’’
தமிழகத்தில் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளதால் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி பள்ளிகளில் உயர், மேல்நிலைப் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12 வகுப்பு வரையிலான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. காலை முதல் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 540 பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இதில் 224 அரசு பள்ளிகளில் 3,675 ஆசிரியர்களும், 206 தனியார் பள்ளிகளில் 4,473 ஆசிரியர்களும், 110 உதவி பெறும் பள்ளிகளில் 2,312 ஆசிரியர்களும், என்று மொத்தம் 10 ஆயிரத்து 460 ஆசிரியர்களும் , 1,773 ஆசிரியரல்லாத பணியாளர்களும், பணியாற்றுகின்றனர். இன்று காலை முதல் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை கண்டறியும் கருவி மூலம் பரிசோதனை செய்த பிறகே ஆசிரியர்கள், மாணவிகளை உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகிறார்கள்.
மேலும் பள்ளியின் நுழைவுவாயிலில் கையை சுத்தம் செய்யும் கிருமி நாசினி வைக்கபட்டுள்ளது. குறிப்பாக வகுப்பு அறையில் மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அமரும்படி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது என்றும், அரசு கூறிய வழிக்காட்டுதலை முறையாக பின்பற்றபட்டுள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். மேலும் பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், அதில் நாங்கள் அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக வழிகள் அமையவில்லை மிகவும் கடினமான ஒரு சுமையாகவே இருந்தது. குறிப்பாக மாணவர்கள் அலட்சியப் போக்கில் இருந்தோம் ஆனால் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வருவது ஒருவிதமான மகிழ்சியை தந்துள்ளது. குறிப்பாக 10, 11 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுவிட்டோம், தற்போது 12 வகுப்பு தேர்வு நடத்தினால் மடுமே கல்லூரிக்கு செல்லும் போது அறிவுதிறன் மேம்பட்டு செல்வோம், ஆசிரியர்கள் நேரடியாக பாடங்களை நடத்துவது போன்று ஒரு சிறந்த செயல் எதுவுமில்லை, பள்ளிக்கு சென்று பாடங்களை கற்றால் மட்டுமே எங்களுடைய அறிவுத்திறன் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை, மேலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சக நண்பர்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என மாணவிகள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளிகள் திறப்பதை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது, அதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும், பணியாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள், பணியாளர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிகள் திறக்கபட்டாலும் அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு கூறிய வழிகாட்டுதலையும், விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுகிறதா மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளதா என்பதை கண்காணிக்க அரசு தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் மாநில அரசு கூறிய வழிகாட்டுத்தலை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.