அரியலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
அரியலூர் அருகே மனைவி பிரிந்துசென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். உடல் அழுகியதால் கடும் துர்நாற்றம் வீசியதால் பரபரப்பு..
அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் இந்திரா நகர் ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சின்னராசு மகன் செந்தில்குமார்(வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரை சேர்ந்த முருகன் மகள் யமுனாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக யமுனா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் செந்தில்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனிமையில் இருந்த செந்தில்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து அவரது உடல் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ளவர்கள் இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, செந்தில்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் உடல் அழுகி காணப்பட்டார்.இதையடுத்து செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து செந்தில்குமாரின் அண்ணன் மாயவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதனை தொடர்ந்து மற்றொரு சம்பவம் : அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு(வயது 54). இவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் இருந்து வந்தார். தற்போது கடந்த சில மாதங்களாகவே மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமாக ஏற்படவே வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்