பலன் தரும் நேரத்தில் பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - கண்ணீரில் தென்காசி விவசாயிகள்
கஷ்டப்பட்டு விளைவித்த பயிரை காப்பாற்றி அது பலனளிக்கும் நேரத்தில் யானைகள் புகுந்து இது போன்ற இன்னலுக்கு ஆளாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளோம்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது அடவிநயினார் அணை. இந்த அணையின் மூலம் சுமார் 7ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இங்குள்ள விவசாய நிலங்கள் மலையடிவாரத்தையொட்டி இருப்பதால் அவ்வப்போது காட்டு விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அவ்வப்போது காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் பண்பொழி அருகே உள்ள கொப்பளிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகளின் அட்டகாசம் நீடித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் சுமார் 30 ஏக்கர் விவசாய நிலங்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தி உள்ளது.. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "இந்த ஆண்டு போதிய மழை இல்லாத நிலையில் விவசாயம் செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானோம், இருப்பினும் போர் பாசனம் மூலம் மிகவும் சிரமப்பட்டு விவசாயம் செய்து வருகின்றோம். பல லட்சம் செலவு செய்து இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்து நெற்பயிர்களை காப்பாற்றி வருகிறோம். குறிப்பாக நெற்பயிர்களை இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடை செய்ய உள்ளோம், இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தற்போது விளைநிலங்களுக்குள் புகுந்ததோடு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மலையடிவாரப் பகுதியில் இருந்து பல ஏக்கர் பரப்பளவில் காட்டு யானைகள் பயிர்களை மிதித்து நாசமாக்கி உள்ளது. கஷ்டப்பட்டு விளைவித்த பயிரை காப்பாற்றி அது பலனளிக்கும் நேரத்தில் யானைகள் புகுந்து இது போன்ற இன்னலுக்கு ஆளாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளோம்.
Morning Headlines: இந்தியாவின் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகள் இதோ! https://tamil.abplive.com/news/india/top-news-in-india-today-abp-nadu-morning-top-india-news-12th-october-2023-tamil-news-144685
ஏற்கனவே அவ்வப்போது காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இது குறித்து வனத்துறையினரிடமும், மாவட்ட நிர்வாகத்திலும் பல முறை முறையிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, இந்த சூழலில் தற்போது காட்டு யானைகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு யானைகளை காட்டுக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்" என்று தெரிவித்தனர். மேலும் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.